பரங்கிமலையில் இளம்பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த குற்றவாளி மீதான குண்டர் சட்டம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பரங்கிமலையில் இளம் பெண்ணை ரயில்முன் தள்ளிய கொலை குற்றவாளி சதீஷை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்து வந்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பைச் சேர்ந்த சதீஷும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு சத்யபிரியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சத்யப்ரியா சதீஷுடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் கடந்தாண்டு அக்டோபர் 13ம் தேதி, கல்லூரி செல்வதற்காக, பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்யபிரியாவை, தாம்பரம் நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார்.

இந்த வழக்கில், சதீஷை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், இந்த வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் பரிந்துரையின் அடிப்படையில், சதீஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நவம்பர் 4ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சதீஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், சட்டவிரோதாமாக, அடிப்படை உரிமையை மீறி, அவசரகதியில் குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நகல் முறையாக வழங்கப்படவில்லை. இது இயற்கை நீதிக்கு முரணாணது. எனவே, சென்னை மாநகர காவல் ஆணையரின் இயந்திரதனமான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் ஒரு கொடூரமான சம்பவத்தை செய்துள்ள சதீஷுக்கு எந்த நிவாரணமும் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது. இதையடுத்து இந்த மனுவுக்கு, தமிழக அரசு, சென்னை மாநகர காவல் ஆணையர், சிபிசிஐடி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சதீஷ் தரப்பில், கைது உத்தரவில் செப்டம்பர் 27 என தமிழிலும், அக்டோபர் 13 என ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முரணைச் சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது. இதற்கு காவல்துறை தரப்பில் போதிய விளக்கம் தரப்படவில்லை. இதையடுத்து இந்த வழக்கில், உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழ், ஆங்கில மொழி பெயர்ப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் வேறுபாடு உள்ளது. எனவே, இதனை கருத்தில் கொள்ளாமல் மனுதாரர் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE