சென்னை அயனாவரத்தில் காவலர் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அயனாவரத்தில் காவலர் அருண்குமார் திங்கள்கிழமை சீருடையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அருண்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து அயனாவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அயனாவரம் ஆயுதப்படையின் குதிரைப் படைப் பிரிவில் பணியாற்றி வந்த காவலர் அருண்குமார். இந்நிலையில், இன்று வழக்கம்போல், சீருடையில் பணிக்கு கிளம்பிய அருண்குமார், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த அயனாவரம் போலீஸார், காவலர் அருண்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவலர் அருண்குமார், பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்ப பிரச்சினை ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, கோவை சரக காவல் துறை டிஐஜியாக பணியாற்றி வந்த சி.விஜயகுமார் ஜூலை 7-ம் தேதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து தமிழக காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால், தலைமையில் காவல் துறையினரின் மன அழுத்தம் போக்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

மேலும், காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும், அவ்வப்போது காவலர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் புத்துணர்வு நிகழ்வுகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை காவலர்களுக்கு டிஜிபி வழங்கியிருந்தார். இந்நிலையில், டிஐஜி விஜயகுமார் தற்கொலை நிகழ்ந்த சில நாட்களில், சீருடையில் காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் காவல் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE