90 மி.லி மது பாக்கெட், காலை வேளையில் டாஸ்மாக் கடைகள் - தமிழக அரசு தீவிர ஆலோசனை

By செய்திப்பிரிவு

சென்னை: மது அருந்துபவர்களில் 40 சதவீதம் பேரில் நலனுக்காக 90 மி.லி மது பாக்கெட் அறிமுகம் செய்வது, ‘காலையில் 7 மணியிலிருந்து 9 மணி வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டும் என்ற கடினமான பணி செய்யும் தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலிப்பது முதலானவை குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ள அமைச்சர் முத்துசாமி, “மக்கள் மது குடிப்பதை நிறுத்துவதன் மூலம் டாஸ்மாக் வருமானம் குறைந்தால் பிரச்சினை இல்லை” என்று தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளைக் கண்டறிந்து அவற்றை 22.6.2023 அன்று முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் செயல்பட்டு வந்த சட்ட விரோத பார்களும் மூடப்பட்டன. இதன் காரணமாக, டாஸ்மாக்கில் தினசரி வருவாய் ரூ.35 கோடி வரை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினசரி ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். ஆனால், தற்போது ரூ.110 முதல் ரூ.120 கோடி தான் தினசரி விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, டாஸ்மாக் நிர்வாகம் தொடர்பாக சென்னையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “500 மதுக்கடைகளை அடைப்பது தொடர்பான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு செய்கிறபோது, அங்கிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

அதைத்தொடர்ந்து அங்கு கடைகளிலே எந்த தவறும் நடந்துவிடக் கூடாது என்பதில் அரசு தெளிவான நடவடிக்கை எடுத்து வருகிறது. மிகச் சில கடைகளில்தான் சில புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகார்கள் பிரபலமாக அனைத்து இடங்களிலும் பெரிதுப்படுத்தப்பட்டுவிட்டது. எனவே, அந்தப் புகார்களை ஒழுங்குப்படுத்துவதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

அதேபோல, பாரை பொறுத்தவரை, யார் யாருக்கு உரிமம் இருக்கிறதோ, அவர்களால்தான் பார்களை நடத்த முடியும். அதற்கான உரிமம் வழங்கப்படும்போது, பார் உரிமம் பெறுபவர்களுக்கு என்னென்ன விதிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அந்த விதிமுறைகளை கடைபிடித்து அவர்கள் நடத்த வேண்டும். அதைக் கண்காணிக்க அதற்கான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதுவும் தற்போது முழுமையான கட்டுப்பாட்டுக்கு ஏறத்தாழ கொண்டு வரப்பட்டுள்ளது.

பார் வைத்திருப்பதற்கான உரிமம் இல்லாமல் யாரும் நடத்தினால், அதை உடனடியாக தடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பல பார்கள் மூடப்பட்டுள்ளது. எங்கெங்கு கூடுதலாக பார்கள் தேவை என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. அந்த வழக்கு முடிந்தவுடனே, அந்த இடங்களுக்கும் பார்கள் அமைப்பதற்கான அனுமதி கொடுத்துவிட்டால், பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும்.

இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், ஒரு 500 கடைகளை அரசு மூடியிருக்கிறது. இந்தக் கடைகள் அடைப்பு தொடர்பாக ஏப்ரல் மாதத்திலேயே அரசாணை வெளியிடப்பட்டது. சட்டமன்றத்தில் அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த 500 கடைகள் இப்போது மூடப்பட்டிருக்கிறது. கடைகளை மூடிய பிறகு அதிகாரிகள் எச்சரிக்கையுடன் கவனிப்பது, இந்தக் கடை அடைக்கப்பட்டதால், வேறு கடைகளுக்குச் சென்று மது வாங்குகிறார்களா அல்லது கடைகளை மூடியதால், தங்களது மதுப்பழக்கத்தை விட்டுவிட்டார்கள் என்றால், அரசுக்கு அதைவிட ஒரு மகிழ்ச்சியான செய்தி வேறெதுவும் இல்லை.

ஆனால், அவர்கள் வேறு டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கினால், தவறில்லை. ஆனால், அதற்குப் பதிலாக வேறு எங்கேயும் அவர்கள் போய்விடக் கூடாது. அதுபோன்ற தவறான விற்பனைகளும் எங்கேயும் வந்துவிடக் கூடாது என்பது உள்ளிட்ட விஷயங்களை துறை அதிகாரிகள் எச்சரிக்கையுடன் கண்காணித்து வருகின்றனர்.

எனவே, எங்களுக்கு இதில் வருமானத்தை ஈட்ட வேண்டும் என்பது ஒரு பெரிய நோக்கம் அல்ல. ஓர் இலக்கு நிர்ணயிப்பது எதற்காக எனில், விற்பனை குறைந்தால் என்ன காரணத்துக்காக குறைகிறது. மது அருந்துவதை நிறுத்திவிட்டார்கள், அதனால் குறைந்துவிட்டது என்று சொன்னால் மகிழ்ச்சி. ஆனால், வேறு எங்கோ தவறான இடத்துக்குப் போவதால், இது குறைகிறது என்று வந்துவிடக்கூடாது. எனவே, ஓர் இலக்கை நிர்ணயித்துக் கொண்டால், விற்பனையை கவனிப்பதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காகத்தான் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. வருமானத்தை அதிகரிப்பதற்காக அல்ல. எனவே, அதுதொடர்பாகவும் இன்று ஆய்வு செய்யப்பட்டது.

அதேபோல், இந்த மது பாட்டில்கள் அது விவசாயிகளுக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. சாலையில் போட்டு விடுகின்றனர். நீர்வழி பாதைகளில் எறிந்துவிடுகின்றனர். இதனால், பல பிரச்சினைகளாக இருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் உடன் பேசியதில் இருந்து டெட்னா பாக்கெட்டுகள் வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அதை கையாள்வது எளிது. அவற்றை பராமரிக்க சிறிய அளவிலான இடம் இருந்தால் போதும். அதேபோல, பாதிப்புகள் பெருமளவு தவிர்க்கப்படும். அதாவது, டேமேஜ் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. எனவே, டெட்னா பாக்கெட்டுகள் வருவது சிறந்தது என்ற கருத்து பலரிடத்திலும் வருவதால், அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துறையின் சார்பில் நாங்கள் எடுத்து வருகிறோம்.

அதேபோல், இப்போது இருப்பதில், 180 மி.லி என்பதுதான், மிக குறைவான அளவு. இந்த 180 மி.லியை ஒருவர் வாங்கி முழுமையாக பயன்படுத்திவிட முடியாது. எனவே, அவர் அதில் பாதியளவை வாங்க வேறொருவருக்காக காத்திருக்க வேண்டியது உள்ளது. இதை மாநிலம் முழுவதும் அதிகாரிகள் ஒரு கணக்கெடுப்பு நடத்தினர். மது அருந்துபவர்களில் ஒரு 40 சதவீதம் பேர், இதுபோல் வேறொருவருக்காக காத்திருக்கின்றனர். குறைந்தது ஒரு அரை மணி நேரமாவது கடையின் அருகே அவர்கள் நின்று கொண்டுள்ளனர் என்ற செய்தி எங்களுக்கு கிடைத்தது.

இதையடுத்து, பக்கத்து மாநிலங்களில் என்னென்ன செய்கின்றனர் என்று பார்த்தபோது, அங்கே 90 மி.லி பாக்கெட் விற்பனைச் செய்யப்படுகிறது. எனவே, 90 மி.லிக்கு ஒரு பாக்கெட் போட்டுவிட்டால், இந்தப் பிரச்சினை தீரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, அதற்கான ஆய்வும் தற்போது நடந்திருக்கிறது. அது தொடர்பாகவும் ஒரு முடிவு எடுக்கப்படும்.

இவை எல்லாவற்றையுமே, எந்தவொரு சட்ட விதிகளையும் மீறாமல், அனைத்தையும் கடைபிடித்து நாம் செய்ய வேண்டும். இது தொடர்பாக எடுத்து வைக்கின்ற அடி, மக்களுக்கு பயனுள்ளதாக, மக்களுக்கான சிரமங்களை குறைப்பதாக இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டுதான் அரசு கவனித்து செயல்பட்டு வருகிறது. அதேபோல், அதிகாரிகளுக்கு கடைகளைத் தூய்மைப்படுத்தி சுத்தமாக வைக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோல், மிக முக்கியப் பிரச்சினையாக இருப்பது கால நேரம். தற்போது பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகளும், பார்களும் இருக்கிறது. எஃப்எல் 2 வகை பார்கள் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை இருக்கிறது. இது நடைமுறையில் இருக்கிறது. ஆனால், காலையில் 7 மணியிலிருந்து 9 மணி வரை, கட்டிட வேலைகள் உள்ளிட்ட கடினமான பணிகளுக்குச் செல்லக்கூடியவர்கள் ஒரு சில சிரமங்களுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு என்ன ஏற்பாடு என்ற கேள்வி அதிகமாக எழுப்பப்படுகிறது. எனவே, அதுகுறித்து அரசு ஆழமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அதில் இன்னும் ஒரு முடிவு எடுக்கப்படவில்லை.

இதுபோன்ற பிரச்சினைகள் அரசின் கவனத்துக்கு வருகிறது. ஆய்வுக்காக செல்லும்போது அவர்களே சொல்கிறார்கள். அப்போது, வேண்டும் என்றால், இரவே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று கூறியதற்கு, அவர்கள் விளையாட்டாக சொன்ன செய்தி, இரவில் வாங்கி வைத்துவிட்டு அதை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்க முடியாது. அதை பயன்படுத்திவிடுவோம். அதனால், வாங்குவதில்லை என்றனர். அதேபோல், எங்கள் குழந்தைகள், குடும்பத்தினர் உள்ளனர். அது மிக பொறுப்பான பதிலாக எங்களுக்குத் தெரிந்தது.

எனவே, இதை தடுப்பதற்கு என்ன ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதனால், ஒரு தவறான இடத்துக்கு அவர்கள் சென்றுவிடக் கூடாது. அந்த தவறான இடத்தை பயன்படுத்த வேண்டாம் என்பதுதான், அவர்களிடத்தில் நாம் வைக்கும் கோரிக்கை. உங்களுடைய கோரிக்கையை சொல்லியிருக்கிறீர்கள், அதற்கான வழிமுறைகளை நாங்கள் யோசித்து கூறுகிறோம். எனவே, ஊடகங்களும் கற்பனையில்கூட தயவுசெய்து ஏதாவது எழுதிவிடதீர்கள்.

இந்த கோரிக்கைகளை நாங்கள் தீவிரமாக பரிசீலித்து, பொதுமக்களிடத்தில் எல்லாம் கேட்டுத்தான் இதற்கு ஒரு தீர்வை எடுப்போம். டாஸ்மாக் நிறுவனத்துக்கு லாபத்தை சம்பாதிப்பது நோக்கம் அல்ல. வருவாயை அதிகப்படுத்த வேண்டும் என்பதும் நோக்கம் அல்ல. மது அருந்துபவர்கள் தவறான இடத்துக்குச் செல்வதை தடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

இது ஒருபுறமிருக்க, இந்த குடிப்பழக்கம் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது, உடல் நிலையில் என்னென்ன பாதிப்புகலை ஏற்படுத்துகிறது என்பது குறித்தெல்லாம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE