கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்ப பதிவுக்கு இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை பயன்படுத்த அனுமதி

By செய்திப்பிரிவு

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாதம் ரூ.1000 வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயலாக்கம் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் விவரங்களை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படவுள்ளது.

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் சேகரிக்க சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பாக திட்டத்தின் சிறப்புப் பணி அலுவலர் இளம்பகவத் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். இதன்படி, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விருப்பம் உள்ள தன்னார்வலர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும், விருப்பம் இல்லாத தன்னார்வலர்களை விண்ணப்ப பதிவுக்கு பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்களுக்கு 2 கி.மீ.க்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்கவும், தன்னார்வலர்கள் விருப்பப்பட்டால் 2.கி.மீ தொலைவுக்கு மேல் பணி வழங்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE