500 டாஸ்மாக் கடைகள் மூடல் | குறைந்த தினசரி வருவாய்: அமைச்சர் ஆலோசனை 

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் குறைவு தொடர்பாக அமைச்சர் முத்துசாமி இன்று (திங்கள்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளார்.

முன்னாள் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவித்தார்.

மேற்படி, அறிவிப்பிற்கிணங்க 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிட அரசாணை வெளியிடப்பட்டது. இந்த, அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளைக் கண்டறிந்து அவற்றை 22.6.2023 அன்று முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் செயல்பட்டு வந்த சட்டவிரோத பார்களும் மூடப்பட்டன.

இதன் காரணமாக, டாஸ்மாக்கில் தினசரி வருவாய் ரூ.35 கோடி வரை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினசரி ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். ஆனால் தற்போது ரூ.110 முதல் ரூ.120 கோடி தான் தினசரி விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மதுபான விற்பனை குறைந்தது தொடர்பாகவும், பார்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாகவும், அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE