மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உயர்கல்வி நிறுவனங்களில் ராகிங் எதிர்ப்பு வாரம்

By செய்திப்பிரிவு

சென்னை: ராகிங் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உயர்கல்வி நிறுவனங்களில் ஆக.12-ம் தேதி முதல் ராகிங் எதிர்ப்பு வாரம் கடைபிடிக்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் மனீஷ் ஆர்.ஜோஷி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

உயர்கல்வி நிறுவனங்களில் ராகிங்கை முற்றிலுமாக தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை யுஜிசி எடுத்து வருகிறது. தற்போது அதற்கென புதிதாக விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அனைத்து கல்வி நிறுவனங்களும் இதை கட்டாயம் பின்பற்றி, கல்லூரிகளில் கண்காணிப்பு நடைமுறைகளை மேம்படுத்த வேண்டும். அதன் மூலம் ராகிங் இல்லாத நிலையை உறுதி செய்ய வேண்டும்.

ராகிங் எதிர்ப்பு தினம் ஆக.12-ம்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆக.12 முதல் 18-ம் தேதி வரை ராகிங் எதிர்ப்பு வாரமாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வாரம் முழுவதும் ராகிங் எதிர்ப்பு தொடர்பான பயிற்சி வகுப்புகள், கட்டுரை எழுதுதல், விளம்பர பலகை உருவாக்குதல், இலச்சினை (‘லோகோ’) வடிவமைத்தல் போன்ற போட்டிகளை நடத்தி, அதில் மாணவர்கள், கல்லூரி ஊழியர்களை பங்கேற்க செய்ய வேண்டும். கருத்தரங்கம், பயிலரங்கம் நடத்தலாம். குறும்படம், ஆவணப் படங்களும் திரையிடலாம். இந்த நிகழ்வுகளின் தொகுப்புகளை www.antiragging.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE