அரசுக்கு முரணாக செயல்படும் ஆளுநர் ரவி பதவிநீக்கம் செய்ய தகுதியானவர்: குடியரசு தலைவருக்கு முதல்வர் 19 பக்க கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் கொள்கைகளுக்கு முரணாகவும், அரசின் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலும் செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, வகுப்புவாத வெறுப்பை தூண்டி, மாநில அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். எனவே, பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு அவர் தகுதியானவர் என்று குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள 19 பக்க கடிதத்தில் கூறியுள்ளதாவது:

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து, வெற்றி பெறச் செய்தனர். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிப்படையாக அரசின் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டு, அரசும், சட்டப்பேரவையும் செய்யும் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறார். மசோதாக்கள், கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையின்றி தாமதம் செய்கிறார். அவர் பொறுப்பேற்றது முதலே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசுடன் கருத்தியல், அரசியல் போரில் ஈடுபட்டு வருகிறார். ஆளுநராக பதவி வகிக்க தகுதியற்றவர் என்பதை,அவரது பல்வேறு நடவடிக்கைகள் புலப்படுத்துகின்றன.

சட்டப்பேரவை இயற்றிய பல முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அவர் தேவையற்ற தாமதம் ஏற்படுத்துவது வேதனை அளிக்கிறது இது மாநில நிர்வாகம், சட்டப்பேரவையின் அலுவல்களில் தலையிடுவதற்கு சமம். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு இல்லை என்பதை அவர்தவறாக பயன்படுத்த கூடாது.

ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதுவழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பான கோப்புகளை கிடப்பில் போட்டுள்ளார். தனது தனிப்பட்ட அரசியல், மத கருத்துகளை தொடர்ந்து பொது வெளியில் தெரிவிப்பது, ஆளுநர் பதவிக்கு பொருத்தமற்றது.

அமைதியாக, நல்லிணக்கத்துடன் வாழும் பல்வேறு மத, மொழி, இனத்தவருக்கு தமிழகம் சொர்க்கம் போன்றது. ஆனால், மதச்சார்பற்ற கொள்கைகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை, தனது பிளவுபடுத்தும் பேச்சுகள் மூலம் அடிக்கடி பகிரங்கமாக வெளிப்படுத்துகிறார்.

அரசியலமைப்புக்கு அவமதிப்பு

‘இலக்கியம் மக்களுக்கு மோசமாக போதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்து, தமிழ் இலக்கியத்தை இழிவுபடுத்தியுள்ளார். இதுபோன்ற அறிக்கைகள் அரசியலமைப்பை அவமதிக்கும் வகையில் உள்ளது.

‘தமிழ்நாடு’ என்ற பெயரை ‘தமிழகம்’ என பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று, ஏற்க இயலாத, அதிர்ச்சி அளிக்கும் கருத்தை தெரிவித்தார். இதில் இருந்து, அவர் தமிழர்களின் நலனுக்கு எதிரானவர் என்பதும், தமிழகம், தமிழ் மக்கள், தமிழர் பண்பாடு மீது ஆழமாக வேரூன்றிய பகைமை கொண்டவர் என்பதும் தெளிவாகிறது.

கடந்த ஜன.9-ம் தேதி சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தியபோது, அவரது ஏதேச்சாதிகாரம் உச்சகட்டத்தை அடைந்தது. அரசால் தயாரிக்கப்பட்டு, ஜன.7-ம் தேதிதான் ஒப்புதல் அளித்த உரை பகுதியை வாசிக்காமல், திருத்தப்பட்ட பதிப்பை வாசித்தார். இதன்மூலம், மாநிலம் மற்றும் அரசாங்கத்தின் நெறிமுறைகளை பகிரங்கமாக கேள்விக்கு உள்ளாக்கினர்.

முதலீடுகளை ஈர்க்க நான் வெளிநாடு சென்றபோது, ‘‘வெளிநாட்டு பயணங்களால் முதலீடுகள் வருவது இல்லை’’ என்று சீண்டுவதுபோல தெரிவித்தார். இதன்மூலம், மலிவான அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது தெளிவாகிறது.

கிரிமினல் குற்றங்கள் குறித்து ஆதாரமற்ற, தவறான அறிக்கைகளை வெளியிடுகிறார். சிதம்பரம் குழந்தை திருமணம் குறித்த அவரது கருத்து, விசாரணையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. காவல் துறையின் நியாயமான விசாரணைக்கு இடையூறாக இருந்ததுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கும் ஏமாற்றம் அளித்தது. இதை அனுமதிக்க முடியாது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அவரை இலாகா இல்லாத அமைச்சராக தக்கவைக்க விரும்பி கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால், செந்தில்பாலாஜி குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்வதால், இலாகாஇல்லாத அமைச்சராக நீடிப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார். ‘ஓர் அமைச்சரை நியமிப்பது அல்லது நீக்குவது முதல்வரின் தனிப்பட்ட விருப்பம். ஆளுநரின் இப்பரிந்துரை சட்டவிரோதம்’ என்று அவருக்கு தெரிவித்தேன்.

பதவியை சிறுமைப்படுத்துகிறார்

ஆனால், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியதாக கடந்த ஜூன் 29-ம் தேதி கடிதம் அனுப்பினார். இதுகுறித்து ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது, அந்த உத்தரவை நிறுத்திவைப்பதாக மற்றொரு கடிதம் கிடைத்தது. தனது இத்தகைய நடவடிக்கைகள் மூலம் ஆளுநர் பதவியை அவர் சிறுமைப்படுத்தி உள்ளார்.

ஆளுநர் என்பவர் அரசியல் விருப்பு வெறுப்புகள், கட்சி அரசியல் அல்லது தனது எதிர்கால நியமனங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் அற்றவராக இருக்க வேண்டும். ஆளுநர் அலுவலகம் என்பது அரசியல் சார்பற்றதாகவும், ஆளுநர் தனது செயல்பாடு, பார்வையில் உண்மையாக, மதச்சார்புஅற்றவராகவும் இருக்க வேண்டும். ஏதோ ஒரு கட்சி அல்லது கருத்தியலின் நலனை வளர்ப்பதற்காக ஆளுநர் செயல்படக் கூடாது.

மத்திய ஆளும் கட்சியை எதிர்க்கும் ஒரு கட்சியின் கைகளில் அமர்ந்து கொண்டு, அந்த மாநில அரசை கவிழ்க்கும் வாய்ப்பை தேடும் ஆளுநரை மத்திய அரசின் முகவராகத்தான் கருதமுடியும்.

ஆளுநரின் இத்தகைய செயல் நமது கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்து, இழிவுபடுத்தி, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை தத்துவங்களையே அழித்துவிடும்.

அவர் வகுப்புவாத வெறுப்பை தூண்டி, மாநில அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். தனது நடத்தை, செயல்பாடுகள் மூலம், தான் ஒருதலைப்பட்சமானவர், ஆளுநர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளார். எனவே, உயர் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு அவர் தகுதியானவர்.

குடியரசுத் தலைவர் விரும்பும் காலம்வரை ஆளுநர் பதவியில் இருப்பார் என்றுதான் அரசியலமைப்பு சட்டப் பிரிவில் உள்ளது. எனவே, தமிழக மக்கள், தமிழக அரசின் நலன் கருதி, ஆளுநராக ஆர்.என்.ரவி நீடிப்பது விரும்பத்தக்கதாகவோ, பொருத்தமாகவோ உள்ளதா என்பதை குடியரசுத் தலைவரின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE