அனுமதி பெறாமல் இயங்கிய ஆர்.ஓ குடிநீர் விற்பனை நிறுவனம்: தடை விதித்த உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் மாட்லாம்பட்டியில் அனுமதி பெறாமல் இயங்கிய ஆர்.ஓ குடிநீர் விற்பனை நிறுவனத்துக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர்.

காரிமங்கலம் ஒன்றியம் காளப்பனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன மாட்லாம்பட்டி கிராமத்தில், உரிய அனுமதி பெறாமல் கேன்களில் குடிநீர் அடைத்து விற்கும் நிறுவனம் செயல்படுவதாக தருமபுரி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் பானு சுஜாதா தலைமையிலான உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று (ஜூலை 9) அப்பகுதியில் திடீர் ஆய்வு நடத்தினர்.

ஆய்வில், அப்பகுதியில் உள்ள புதிய கட்டிடம் ஒன்றில் ரூ.5 மதிப்பிலான 2 நாணயங்களை செலுத்தினால் 20 லிட்டர் அளவுக்கு குடிநீர் வழங்கப்படும் என்ற விளம்பர பதாகை வைக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் நடப்பதும், 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட காலி கேன்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், அந்த கட்டிடத்தின் மேல் பகுதியில் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு அவற்றுடன் ஆர்.ஓ இயந்திரம் பொருத்தப்பட்டு நிலத்தடி நீரை சுத்திகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். இதற்கான உரிய அனுமதி எதையும் அந்த நிறுவனத்தினர் பெறவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. ஊராட்சிகள் சார்பில் ஆங்காங்கே நாணயம் செலுத்தினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் இயங்குவதைப் பார்த்து வர்த்தக நோக்கில் இந்த நிறுவனத்தை செயல்படுத்தியதும் தெரிய வந்தது.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் அரசின் பல்வேறு துறைகளிடம் முறையான அனுமதி பெற்ற பிறகே செயல்பட வேண்டும் என விளக்கிய அதிகாரிகள், உரிய அனுமதி பெறும் வரை நிறுவனத்தை செயல்படுத்தக் கூடாது என்று எச்சரித்து தடை விதித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘தருமபுரி மாவட்டத்தில் இதுபோன்று வேறு எங்கேனும் உரிய அனுமதி பெறாமல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செய்யப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றனர்.

இந்த ஆய்வின்போது, காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE