ஆளுநரை சமாளிக்க முடியாமல் முதல்வர் திணறுகிறார்: சீமான்

By இ.ஜெகநாதன்


காரைக்குடி: ஆளுநரை சமாளிக்க முடியாமல் முதல்வர் திணறுகிறார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''முதலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பெரிதாக தெரிந்தது. தற்போது வெங்காயம், தக்காளி விலை பெரிதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு ஆபத்து வருகிறதோ, இல்லையோ, அவர்களால் நாட்டுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ள ஆபத்தில் இருந்து யார் காப்பாற்றுவது? இரண்டு ஆண்டுகால ஆட்சி ஒரு யுகத்தை கடந்த மாதிரி உள்ளது. எந்த பக்கம் திரும்பினாலும் பிரச்சினைகள், காவல் நிலையங்களில் மரணம், காவலர்கள் தற்கொலை என உள்ளது. மின்கட்டணம், சொத்து வரி உயர்வு, அரிசி, பால், பருப்பு விலை உயர்வு என 8 கோடி மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாத இந்த அரசு இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன?

தலைநகர் சென்னையிலேயே சாலைகள் படுமோசமாக உள்ளன. ஆனாலும் வளர்ச்சி என்கின்றனர். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதன்மூலம் வாக்கு வாங்க வேண்டும் என்பது இல்லை. காசு கொடுத்து வாக்கு வாங்க வேண்டும் என்பது தான் முதன்மையாக உள்ளது. மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விஷயத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, வந்தவுடன் ஒரு பேச்சு என உள்ளது. மேலும் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதால் ஒன்றும் ஆகாது. தேர்தலுக்குப் பின்னர் மோடி ஆட்சி அமைக்க 50 சீட் தேவைப்பட்டால், எதிராக ஒன்று கூடியவர்களில் சிலர் சென்று விடுவர். ஏற்கெனவே திமுக இதற்கு உதாரணம். இந்த விஷயத்தில் மண் குதிரைகளை நம்பி, ஆற்றில் பயணம் செய்ய முடியாது. மத்திய ஆட்சியாளர்கள் மக்களை திசை திருப்பவே பொது சிவில் சட்டம் பற்றி பேசுகின்றனர். தற்போது இருக்கும் சட்டமே மக்களுக்கு சமமாக இல்லை. அப்புறம் எதற்கு பொது சிவில் சட்டம். மணிப்பூரில் கலவரத்தை செய்ததே மத்திய அரசுதான்.

தேர்தலில் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம். திராவிட கட்சிகள் இல்லாத, நாம் தமிழர் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி சேர்வது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். அரசியல் என்பது வாழ்வியல். அரசியல் இல்லாமல் ஆளுநர் ஆக முடியாது என்பதால் அவர் அரசியல் பேசலாம். அண்ணாமலை பேசுவதற்கு முன்பே ஆளுநர் அனைத்தையும் பேசி விடுகிறார். இதனால் பாஜகவில் தலைவர் யார்? என்ற குழப்பம் வந்துவிட்டது. ஆளுநர் நம்மை முந்துகிறார் என்ற எண்ணத்தில் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று அண்ணாமலை கூறுகிறார். ஆளுநரை சமாளிக்க முடியாமல் முதல்வர் திணறுகிறார். மேலும் தமிழகத்தில் முக்கிய பதவிகளில் வட இந்திய அதிகாரிகளை நியமித்து வருவதால், ஏதோ ராஜஸ்தானில் வாழ்வது போன்று உள்ளது.

அரசியல் பேசவில்லை என்றால் தமிழிசை எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் போய்விடும். ராகுல்காந்தி தங்களுக்கு போட்டியே இல்லை என பாஜக கூறுகிறது. ஆனால் அவருக்கு பயந்து, எம்.பி பதவியை பறித்து, தேர்தலில் போட்டியிட விடாமல் செய்துள்ளது. இது ஜனநாயக படுகொலை. ரவீந்திரநாத் எம்.பி வெற்றி செல்லாது என்பதும் தவறு. தலைவர்கள் தேர்தலில் சொத்து மதிப்பில் தவறான தகவலைத்தான் கூறுகின்றனர். அவர்களை ஏன் தகுதி நீக்கம் செய்யவில்லை? நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து விடுவாரோ என்று சிலருக்கு பயம். அதனால் இதுவரை அவரது திரைப்படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள். தற்போது அவரது 'லியோ' திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்'' என்று தெரிவித்தார். மீனவர்கள் கைது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ''அண்ணாமலையிடம் கேளுங்கள்'' என்று சீமான் பதிலளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE