போரூர் ராமச்சந்திரா கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட அரசு நிலத்தை மீட்கும் அரசின் அதிகாரத்தில் தலையிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தை நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் மீட்க ஒருவேளை தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் அந்த அதிகாரத்தில் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்கும் பொருட்டு கடந்த 1985-ம் ஆண்டு போரூரில் உள்ள ஸ்ரீ ராமச் சந்திரா கல்வி அறக்கட்டளைக்கு தமிழக அரசு தரப்பில் சுமார் 125.66 ஏக்கர் புறம்போக்கு நிலம் நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்துடன் ராமச் சந்திரா கல்வி அறக்கட்டளை தனது 133.68 ஏக்கர் பட்டா நிலத்தையும் சேர்த்து மருத்துவமனையுடன் இணைந்த மருத்துவக் கல்லூரியை தொடங்கியுள்ளது.

அதன்பிறகு 1994-ம் ஆண்டு இந்த மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவித்தது. இந்நிலையில் ராமச்சந்திரா கல்வி அறக்கட்டளை தனது வசமிருந்த 42 ஏக்கர் நிலத்தை ஸ்டெர்லிங் என்ற கம்ப்யூட்டர் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளது. இந்த நிலத்தை கனரா வங்கியில் அடமானமாக வைத்து ஸ்டெர்லிங் நிறுவனம், ரூ 500 கோடி கடன் பெற்றுள்ளது.

இந்த தொகையை ஸ்டெர்லிங் நிறுவனம் முறையாக திருப்பிச் செலுத்தாததால் சர்பாசி சட்டத்தின் கீழ் அந்த நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இறுதியாக அந்த நிலத்தை திருப்பூரைச் சேர்ந்த எஸ்சிஎம் சில்க்ஸ் என்ற நிறுவனம் வாங்கியுள்ளது.

சர்பாசி சட்டத்தின்கீழ் வாங்கப்பட்ட 42 ஏக்கர் நிலத்தை, தமிழக அரசு நில உச்சவரம்பு சட்டத்தின்கீழ் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எனவே அரசின் அந்த நடவடிக்கையில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமெனக்கோரி எஸ்சிஎம் சில்க்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாகநடந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜி,மாசிலாமணி மற்றும் பி.எஸ்.ராமனும், அரசு தரப்பில் அரசு தலைமைவழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரமும் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் கூட்டணி வைத்து அரசு நிலத்தை சட்ட விரோதமாக அபகரித்து அதன் மூலம் கோடிக் கணக்கில் ஆதாயம் தேடுவது தமிழகத்தில் வாடிக்கையாகி விட்டது.

இந்தவழக்கில் அரசு தரப்பில், ராமச்சந்திரா கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க இன்னும் நடவடிக்கைகள் எதுவும் தொடங்கப்பட வில்லை என்றும், மனுதாரர் தரப்பில் இந்த வழக்கு முன்னெச்சரிக்கையாக தொடரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கூட்டணி அமைத்து இந்த நிலம் நில உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் ராமச் சந்திரா கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதையும், அந்த நிலத்தை எந்த காலகட்டத்திலும் திருப்பி எடுத்துக்கொள்ளும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்பதையும் திட்டமிட்டு மறைத்துள்ளனர்.

இதை ரூ. 500 கோடி கடன்கொடுத்த கனரா வங்கி நிர்வாகமோ அல்லது அதன்பிறகு ஏலம் எடுத்த நிறுவனங்களோ சரிபார்க்கவில்லை. இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் அரசு புறம்போக்கு நிலத்தை மறுவரையறை செய்து, அதை மூன்றாவது நபர்களுக்கு விற்க உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது இந்த விவகாரத்தில் அரசுக்கும், மனுதாரர் நிறுவனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் இந்த வழக்கில் மனுதாரருக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது. அதேபோல ராமச்சந்திரா கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நிலத்தை ஒருவேளை அரசு மீட்க நடவடிக்கை மேற்கொண்டால் அந்த அதிகாரத்திலும் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்