ராகுல் காந்தி பிரதமரானால் முதலில் சிறைக்கு செல்பவர்கள் மோடி, அமித்ஷா தான் - நாராயணசாமி பேச்சு

By அ.முன்னடியான்

புதுச்சேரி: ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதில் நாராயணசாமி பேசியதாவது: கடந்த 9 ஆண்டுகால மோடி ஆட்சியில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காங்கிரஸ் மீது ஊழல் குற்றசாட்டு கூறும் பிரதமர் நரேந்திர மோடி பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் ஊழல் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என விளக்க வேண்டும்.

மோடியும், அதானியும் நெருங்கிய நண்பர்கள். அதானி உலக பணக்காரராக உயர்வதற்கு பிரதமர் மோடி உதவினார். அது குறித்து கேட்டபோதுதான் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல் காந்தி மக்களுக்காக போராடுவார்.

நாட்டில் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டதால் மக்கள் பிரதமர் மோடி மீது அதிருப்தியில் உள்ளனர். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராகுல் காந்தி நாட்டின் பிரதமரானால் முதலில் நரேந்திர மோடி, அமித் ஷா இருவரும் சிறைக்கு செல்வார்கள்.

திகார் சிறையில் இருவருக்கும் இடமிருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து பெறுவோம் குறிப்பிட்டுள்ளனர்.

புதுச்சேரியை நிதிக்குழுவில் சேர்ப்போம் என்றும் தெரிவித்திருந்தனர். முதல்வர் ரங்கசாமி மாநில அந்தஸ்துக்காகத்தான் பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்தோம் என்று சொன்னவர், இப்போது மாநில அந்தஸ்து குறித்து வாயை திறப்பதில்லை. அவருக்கு தெரியும் மாநில அந்தஸ்தை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியது தான். அவர்கள் கொடுக்க மாட்டார்கள் என்பது அவருக்கு தெரியும்.

புதுச்சேரியில் 300 பேருக்கு மேல் வேலை கொடுக்கவில்லை. அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட கோப்பை வைத்துதான் செய்துள்ளனர். அதனால் ஒட்டுமொத்தமாக மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசும், புதுச்சேரியில் உள்ள ரங்கசாமி அரசும் ஊழல் அரசுகள்.

துணைநிலை ஆளுநர் புதுச்சேரி புல்லட் ரயில்போல வளர்ச்சி பெற்றதாகக் கூறுகிறார். ஆனால், முதல்வர் நிதியில்லை என அதிருப்தி தெரிவிக்கிறார். பிரதமரும், புதுச்சேரி முதல்வரும் மக்களை ஏமாற்றியுள்ளனர். புதுவை மாநில முதல்வராக ரங்கசாமி தொடருவது சந்தேகமாக உள்ளது.

ஆகவே வரும் மக்களவைத் தேர்தலுடன் புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவைக்கும் தேர்தல் வரும் வாய்ப்பு உள்ளது. பாஜகவுக்கு எதிராக புதுச்சேரி காங்கிரஸ் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவது அவசியம்" என்றார்.

வைத்திலிங்கம் எம்பி பேசும்போது: நாட்டில் தற்போது ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுகிறது. ராகுல் காந்தியின் பதவி பறிப்பு சரியல்ல என நீதிமன்றத்தில் எடுத்துரைத்த பிறகும் நீதி மறுக்கப்படுகிறது. ஏற்கனவே ராகுல் காந்தியைப் போல பதவி பறிக்கப்பட்ட லட்சத்தீவு எம்.பி-க்கான தண்டனையை கேரள உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

குஜராத்திலும் ஒரு எம்பியின் வழக்கில் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் ராகுல் காந்திக்கு மட்டும் நீதி மறுக்கப்படுகிறது. அதே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும் என்பதால் அதைத் தடுக்கும் வகையில் மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. ராகுல் காந்தியை மக்களவையில் பேசவிடாமல் பாஜக தடுக்கலாம். ஆனால், அவர் மக்களிடையே அதானியின் முறைகேடுகளை விளக்கி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

போராட்டத்தில் இறுதியில் மகளிர் காங்கிரஸார் விலைவாசி உயர்வை கண்டித்து கழுத்தில் தக்காளி, இஞ்சி உள்ளிட்ட காய்கறிகள் அடங்கிய மாலையை அணிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE