நண்பரிடம் தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்திய டிஐஜி விஜயகுமார் - காவல்துறை விசாரணையில் தகவல்

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனக்கு தற்கொலை எண்ணம் இருப்பது குறித்து தன் நண்பரிடம் பகிர்ந்து கொண்ட தகவல் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை சரக காவல்துறையின் டிஐஜியாக பணியாற்றி வந்த சி.விஜயகுமார்(47), நேற்றுமுன்தினம் (7-ம் தேதி) ரெட்ஃபீல்ட் பகுதியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ராமநாதபுரம் காவல்நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த டிஐஜி விஜயகுமார் அதிலிருந்து மீள முடியாமல் தனது பாதுகாவலரிடம் இருந்த கைத்துப்பாக்கியை வாங்கி சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக அவரது பாதுகாவலர் ரவிச்சந்திரன் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், ‘‘நான் ஈரோடு மாவட்ட ஆயுதப்படையில் முதல்நிலைக் காவலராக பணியாற்றி வருகிறேன். 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்த நான், 2016-ம் ஆண்டு முதல் கோவை சரக டிஐஜியின் தனிப் பாதுகாவலராக பணியாற்றி வருகிறேன். அவரது பாதுகாவலுக்காக, கோவை மாவட்ட ஆயுதப்படையில் இருந்து 183 என்ற 9 எம்.எம் பிஸ்டல் வகை துப்பாக்கி வழங்கப்பட்டிருந்தது. கடந்த 6-ம் தேதி நான் பணியில் இருந்தேன். அன்று இரவு 9 மணிக்கு டிஐஜி வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். கோவை சரக டிஐஜி சரிவர தூக்கம் வரவில்லை என மாத்திரை எடுத்துக் கொள்வார். முகாம் அலுவலகத்தில் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் நான் தங்கியிருந்தேன்.

வழக்கமாக, காலை 7 மணிக்கு டிஐஜி விஜயகுமார், டிஎஸ்ஆர் (தினமும் நடக்கும் நிகழ்வுகள்) பார்ப்பதற்காக கீழே வருவார். கடந்த 7-ம் தேதி 6.30 மணிக்கு கீழே வந்தார். காவலர் ரவி வர்மாவிடம் இருந்து பால் வாங்கிக் குடித்தார். 6.40 மணிக்கு நான் தங்கியிருந்த அறைக்கு வந்த டிஎஸ்ஆர் கேட்டார். நான் எடுத்துக் கொடுத்தேன். நான் அறையில் துப்பாக்கி வைத்திருக்கும் இடத்துக்கு சென்ற டிஐஜி, அதை எடுத்து எவ்வாறு பயன்படுத்துவது என என்னிடம் பேசிக் கொண்டு அறையை விட்டு வெளியே சென்றார். நான் டிசர்ட் போட்டு அறையை விட்டு வெளியே வருவதற்குள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.

நானும், கேம்ப் அலுவலக ஓட்டுநர் அன்பழகனும் வெளியே வந்து பார்த்த போது தரையில் மல்லாந்த நிலையில் தலையில் ரத்த காயத்துடன் அவர் கிடந்தார். துப்பாக்கி அருகே கிடந்தது. அவரது மனைவி, நாங்கள் ஒன்று சேர்ந்து விஜயகுமாரை மீட்டு 7 மணிக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தோம். மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு அவர்உயிரிழந்ததை தெரிவித்தனர். என்ன காரணத்துக்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரியவில்லை’’ எனக் கூறப்பட்டிருந்தது. அதன் பேரில் சட்டப்பிரிவு 174 (தற்கொலை செய்தல்) பிரிவின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தொடர்ந்து விசாரணை: டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரித்த போது, சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னரே தனக்கு தற்கொலை எண்ணம் வருவதாக, காவல்துறையில் இல்லாத, அரசுத் துறையில் பணியாற்றும் நண்பரிடம் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்வது தவறு எனக் கூறிய அவரும், டிஐஜி மற்றும் குடும்பத்தினர் இணைந்து ஆனைக்கட்டிக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால், பணிச்சூழல் காரணமாக அங்கு செல்ல முடியவில்லை என்பது தெரியவந்தது. மேலும், தற்கொலை எண்ணத்தில் இருந்த அவர், துப்பாக்கி பயன்பாடு குறித்து பாதுகாவலரிடம் விசாரித்து உள்ளார். அதேபோல், டிஐஜி விஜயகுமாரின் செல்போன் அழைப்புகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE