சென்னை: அனைத்து ஒப்பந்தப் புள்ளிதாரர்களும் ஒரே விலைப்புள்ளியை குறிப்பிட்டுள்ளதால், மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் கூறப்பட்டுள்ளது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் ரூ.400 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது. இந்தப் புகாருக்கு மறுப்பு தெரிவித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அனைத்து ஒப்பந்தப் புள்ளிதாரர்களும் ஒரே விலைப்புள்ளியை குறிப்பிட்டுள்ளதால், மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மின்மாற்றிகளை விற்பனை செய்து வருகின்றன. கடந்த 2011-ம் ஆண்டு முதல் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்ட கோப்புகளை பரிசீலனை செய்ததில் பெரும்பாலான நேரங்களில் நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியை சமர்ப்பித்துள்ளது தெரிய வருகிறது.
மின்மாற்றிகள் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும், சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை உள்ள 44 மின் பகிர்மான வட்டங்களுக்கு மின்மாற்றிகளை எடுத்து சென்று வழங்குவதால், அவை சரக்கு வாகன கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும், மேற்காணும் நிறுவனங்கள் உள்ளுரிலேயே பல வருடங்களாக இயங்கி வருவதால், அவர்களுக்கு மற்ற நிறுவனங்களின் விலைப்புள்ளிகள் குறித்து தெரிய வாய்ப்புள்ளது.
» ரிஷப் ஷெட்டி அறக்கட்டளை தொடக்கம்: பிறந்தநாளில் கணவருக்கு மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்
» 500-வது நாள்... ரஷ்யா - உக்ரைன் போரின் ‘விலை’தான் என்ன? - ஒரு தெளிவுப் பார்வை
ஒப்பந்த விலைப்புள்ளிகள் அனைத்தும் கணினி மூலமாகவே பெறப்படுகிறது. எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியை சமர்ப்பித்திருந்தாலும், தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத்தன்மை சட்டம்-1998 (Tamil Nadu Tender Transparency Act 1998), விதி எண்.10(5)-ன்படி தமிழக மின்வாரியத்துக்குத் தேவையான மின்மாற்றிகளை தகுதி வாய்ந்த அனைத்து சிறு, குறு நிறுவனங்களுக்கும் பிரித்து வழங்கி மேற்படி விதிகளின் படி கொள்முதல் ஆணை அளிக்கப்பட்டுள்ளது.
மின்மாற்றி தயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மாதிரி விலைப்புள்ளி கோருவது கடந்த இரு ஆண்டுகளில் நிகழும் நிகழ்வுகள் அல்ல. இந்த நடைமுறை, கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகவே பின்பற்றப்பட்டு வருகிறது.
மேலும், ஜெம் போர்டலில் குறிப்பிட்ட விலையை விட அதிக விலைக்கு மின்மாற்றிகள் வாங்கியுள்ளதாக புகாரில் கூறியுள்ளது. ஒப்பந்த புள்ளிகளை பரிசீலனை செய்யும்போது அன்றைய தேதியில் தமிழ்நாடு மின்சார வாரிய விவரக் குறியீடுகளுடன் பெரும்பான்மையான விவரக் குறியீடுகளுடன் ஒத்து வரும் ஜெம் போர்டல் விவரக் குறியீடுகள் கொண்ட விலையை ஒப்பிட்டுத்தான் ஒப்பந்த புள்ளி வழங்கப்படுகிறது. ஆனால், இன்றைய தேதியில் ஜெம் போர்டல்விலையை எடுத்து ஒப்பீடு செய்துள்ளது சரியான நடைமுறையாகாது.
புகாரில் மற்ற மாநிலங்களோடு மின்மாற்றிகளின் கொள்முதலை ஒப்பீடு செய்து ரூ.397.37 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளது. புகாரில் மின்மாற்றிகளின் வேறுபட்ட விவரக் குறியீடுகளின் அடிப்படையிலும், வேறுபட்ட மூலப்பொருட்களின் அடிப்படையிலும் உதாரணமாக காப்பர் மின்சுருள் கொண்ட மின்மாற்றிகளோடு ஒப்பிடு செய்யாமல் அலுமினியம் மின்சுருள் கொண்ட மின்மாற்றிகளோடு ஒப்பீடு செய்துள்ளது. மேலும், கீழ்கண்ட காரணங்களினால் புகாரில் நிர்ணயம் செய்த விலையானது தவறாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
> புகாரில் ஜெம் போர்ட்டல் விலையை ஜுன், 2023-ம் மாதத்தில் கணக்கில் கொண்டுள்ளது. மின்சார வாரியம் ஒப்பந்த புள்ளிகளை பரிசீலனை செய்யும் காலத்தில் மின்சார வாரியத்தின் விவர குறியீட்டுடன் ஒத்து வரும் ஜெம் போர்டல் விலையுடன் ஒப்பீடு செய்யப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
> புகாரில் மின்மாற்றிகளின் விலையை கணிக்கும்போது அலுமினிய மின்சுருள் பயன்படுத்தப்படும் மின்மாற்றிகளின் விலையை அடிப்படையாக வைத்து, 25 சதவீதம் விலையை அதிகரித்து தாமிர மின்சுருள் பயன்படுத்தப்படும் மின்மாற்றிகளின் விலையோடு ஒப்பீடு செய்திருப்பது தவறானதாகும்.
> அலுமினிய மின்சுருளைவிட தாமிர மின்சுருள் விலை மூன்று மடங்கு அதிகமாகும். அலுமினியம் மின்சுருள் உபயோகிக்கும் மின்மாற்றிகளின் விவர குறியீடுகளும் காப்பர் மின்சுருள் உபயோகிக்கும் மின்மாற்றிகளின் விவர குறியீடுகளும் வெவ்வேறானவை. மேலும், இரு மின்மாற்றிகளின், ஆயுட்காலம், பழுது விகிதம் ஆகியவற்றை ஒப்பிடும்போது, காப்பர் மின்மாற்றிகளின் தரம் மிகவும் அதிகம் மற்றும் இதன் ஆயுட்காலம் 25 முதல் 30 ஆண்டுகள் வரை அதிகமான பழுதுகள் இன்றி இயங்கக்கூடியது.
> புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கொள்முதல் செய்யப்படும் மின்மாற்றிகள் மூன்று வருடகால உத்திரவாதத்துடன் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மின்மாற்றிகள் ஐந்து வருடகால உத்தரவாதத்துடன் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்யும் மின்மாற்றிகளின் உத்தரவாத காலம், பணம் செலுத்தும் கால அளவு, கொதிநிலை ஏற்புத் திறன் அளவு, காப்பர் மின்சுருள் அளவு போன்ற காரணிகளால், மற்ற மாநிலங்களில் கொள்முதல் செய்யும் மின்மாற்றிகளின் விலைகளோடு ஒப்பிட இயலாது.
> தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஒரே நிறுவனமாக இயங்குவதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள 44 மின் பகிர்மான வட்டங்களுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மின்மாற்றிகளை கொண்டு செல்ல வேண்டியுள்ளதால், அதற்குண்டான செலவையும் கொள்முதல் விலையுடன் சேர்த்து குறிப்பிடப்படுகிறது.
> மின்வாரிய Cost Data-வில் உள்ள விலை ஒப்பந்த புள்ளி நிர்ணயம் செய்யும் காலத்துக்கு ஏற்ப திருத்தம் செய்யப்படவில்லை. ஒப்பீடு செய்யப்பட்ட மாநில மின்வாரியங்களின் தொழில் நுட்ப குறிப்புகளை விட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தொழில்நுட்ப குறிப்புகள் மேம்பட்டு உள்ளன.
> மேலும், புகாரில் கூறியவாறு அனைத்து நிறுவனங்களும் ஒரே விலைப்புள்ளியை சமர்ப்பித்தாலும், அந்நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து, அந்நிறுவனங்கள் வழங்கிய விலைப்புள்ளியைக் காட்டிலும் தோராயமாக ரூ.50,000 வரை விலைகுறைப்பு செய்துதான் அந்நிறுவனங்களிடமிருந்து மின்மாற்றிகளை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
> திமுக அரசு, எந்த நிலையிலும், முறைகேடுகள் நடைபெறுவதை அனுமதிக்காது. ஆகவே, மின்மாற்றிகள் கொள்முதலில் புகாரில் கூறியவாறு எவ்வித முறைகேடுகளும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைபெறவில்லை என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago