சென்னையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடு: சர்க்கரை நோய் சிகிச்சையில் சாதனைகளும் சவால்களும்

By கண்ணன் ஜீவானந்தம்

இந்தியாவில் தொற்றா நோய்களை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றில் தமிழக அரசு கடந்த 5.08.2021 அன்று "மக்களைத் தேடி மருத்துவம்" என்ற திட்டத்தைத் தொடங்கியது. இந்தத் திட்டத்தில், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு வீடு தேடிச் சென்று சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 51 ஆயிரத்து 661 பயனாளிகளுக்கு முதன்முறை சேவைகளும், 3 கோடியே 4 லட்சத்து 71 ஆயிரத்து 896 நபர்களுக்கு தொடர் சேவைகளும் வழங்கப்பட்டுள்ளது.

நோக்கம்: "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியால் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றில் உயர் ரத்தம் உள்ளிட்ட மற்ற சேவைகளுக்கு பொது மக்களிடம் நல்ல ஒத்துழைப்பு உள்ளது. ஆனால், சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் மருத்துவர்களும், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்களும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதை தெரிந்துகொள்வது தான் இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கம்.

தரவுகள்: சென்னை மாநகராட்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மொத்தம் 1.14 லட்சம் பேர் சர்க்கரை நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிக சர்க்கரை நோய் பாதிப்பு உள்ள இளங்கோ நகர், வியாசர்பாடி, செல்லப்பா தெரு, செம்பியம், ஒரகடம், வரதராஜபுரம், எம்எம்டிஏ காலனி, வில்லிவாக்கம் ஆகிய 8 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த 8 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில்தான் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 1000-க்கும் மேற்பட்டவர்கள் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆய்வு முறை: மேற்கண்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவ அலுவலர்கள் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் களப்பணியாளர்கள், இதனால் பயன் பெற்று வரும் பயனாளிகள் ஆகியோரிடம் பேசி கருத்துகள் பெறப்பட்டது. பெரும்பாலான நபர்களிடம் நேரடியாகவும், ஒரு சிலரிடம் தொலைபேசி மூலமாகவும் கருத்துகள் கேட்கப்பட்டது. இந்தக் கருத்துகளின் அடிப்படையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் எதிர்கொண்டு வரும் சவால்கள் தொடர்பான கருத்துகள் பெறப்பட்டன.

சாதனைகள்:

தொடக்க நிலையில் கண்டறிதல்: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒருவரின் வீட்டுக்கு சோதனைக்கு செல்லும்போது, அந்த வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் தொற்றா நோய்கள் தொடர்பான தொடக்க நிலை பரிசோதனைகளை செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனையின் போது இளம் வயதினருக்கு தொடக்க நிலையிலே தொற்றா நோய்கள் பாதிப்பு உள்ளதா என்று கண்டறிப்படுகிறது. இதன் காரணமாக தொடக்க நிலையிலே சிகிச்சை தொடங்குவதால் அவர்களுக்கு தெற்றா நோய்களின் பாதிப்பை கட்டுப்பாட்டில் வைக்க இந்தத் திட்டம் உதவியாக உள்ளதாக மருத்துவர் அலுவலர்கள் தெரிவித்தனர்.

மருந்துகள் அளித்தல்: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு முன்பாக பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு மாதமும் மருந்துகளைப் பெற அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு தான் வர வேண்டி இருந்தது. ஆனால், தற்போது அவர்கள் இருக்கும் இடத்துக்குச் சென்று மருந்துகள் அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் மருத்துவமனைகளுக்கு சென்று வாங்க வேண்டிய நிலைமை இல்லாமல் ஆகிவிட்டதாக பயனாளிகள் தெரிவித்தனர்.

இளம் வயதினரின் ஒத்துழைப்பு: இளம் வயதினர் அதிகம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அவர்கள் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்குவதாக களப்பணியாளர்கள் தெரிவித்தனர். குறிப்பாக, உணவு கட்டுப்பாடுகளை இளம் வயதினர் சிறப்பாக பின்பற்றுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் (Prediabetes) உள்ள இளைஞர்கள், உணவுக் கட்டுப்பாடுகள் மூலம் தங்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படாத அளவுக்கு முறையாக உணவு முறைகளை பின்பற்றுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சவால்கள்:

60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் உணவுக் கட்டுப்பாடு: சென்னை மாநகராட்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீத பேர் உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது இல்லை. இதன் காரணமாக அவர்களின் சர்க்கரை அளவு 3 மாதத்தில் ஒரு முறை கட்டுப்பாட்டில் இல்லாத அளவுக்கு சென்று விடுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறையும் அவர்களுக்கு பல்வேறு சோதனைகள் மற்றம் சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொழிற்சாலை பணியாளர்கள்: சென்னையில் புறநகர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் சென்னையில் தங்கி இருந்தாலும் அடிக்கடி வெளியூர் சென்று வருகின்றனர். அவ்வாறு வெளியூர் செல்லும்போது அவர்கள் முறையாக மருந்துகளை எடுத்துக் கொள்வது இல்லை. மீண்டும் அவர்கள் சென்னை வந்த பிறகு, அவர்களுக்கு சோதனை செய்தால், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஓட்டுநர்கள்: சென்னை மாநகராட்சியில் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ஓட்டுநர்களில் பலர் முறையாக இன்சுலின் எடுத்துக் கொள்வது இல்லை. பல மணி தொடர்ந்து வாகனம் ஓட்டும் நிலை உள்ளதால் இவர்களால் இன்சுலின் எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் பலர் எங்களுக்கு இன்சுலின் வேண்டாம், மாத்திரையாக கொடுங்கள் என்று கோரிக்கை வைக்கின்றனர். அவ்வாறு மாத்திரை கொடுத்தாலும் பலர் முறையாக மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்வது இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நோய் குறித்த விழிப்புணர்வு: சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களில் பலர் நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். பரிசோதனை செய்ய சரியான கால இடைவெளியில் வருவது இல்லை. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 3 மாதங்களுக்கு ஒரு முறை சர்க்கரை நோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஆனால், பலர் இந்த சோதனை மேற்கொள்ள வருவது இல்லை. நோயினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோய் பாதிப்பு குறித்து தெரிவித்தாலும் அதை பொதுமக்கள் கண்டு கொள்வது இல்லை.

உடற்பயிற்சியின் முக்கியத்துவம்: தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்க்கை முறையில் கண்டிப்பாக மாற்றத்தை கொண்டு வர வேண்டும். எனவே கிடைக்கும் நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து கூறினாலும், பலர் உடற்பயிற்சி மேற்கொள்வது இல்லை. கூலித் தொழிலாளர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்களில் பலர் முறையான உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் உள்ளனர்.

முடிவு: இளம் வயதினர் தெற்றா நோய் குறித்து விழிப்புணர்வுடன் இருந்தாலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதிலும், நோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் தமிழக அரசு புதிய முறைகளை கண்டறிய வேண்டியுள்ளது என்பது தெரியவருகிறது.

குறிப்பு: REACH (Resource Group for Education and Advocacy for Community Health) Media Fellowship programme for Reporting on NCDs 2023 பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதப்பட்ட கட்டுரை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்