டிஐஜி விஜயகுமார் மரணம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட இபிஎஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: "டிஐஜி விஜயகுமாரின் இறப்பு தற்கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "காவலர்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்காக அதிமுக ஆட்சியில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம். காவலர் நலவாழ்வுத் திட்டம் என்ற திட்டத்தை துவக்கி, நிமான்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து சுமார் ஒன்றரை லட்சம் காவலர்கள், காவல் துறையைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு மன அழுத்தத்தைப் போக்குவதற்காக நடவடிக்கை எடுத்தது அதிமுக அரசு.

கோவை சரக டிஐஜி விஜயகுமார் ஒரு திறமையான, நேர்மையான காவல் துறை அதிகாரி. அவருக்கு 6 மாத காலமாக மன அழுத்தம் இருந்துள்ளதாகவும், அதற்காக கடந்த 20 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்ததாகவும் காவல் துறை உயர் அதிகாரிகளே தெரிவிக்கின்றனர். அப்படி மன அழுத்தம் உள்ளவரை, சிகிச்சைப் பெற்று வருபவருக்கு மேலும் பணிகளைக் கொடுத்து மன அழுத்தத்துக்கு ஆளாக்கிய காரணத்தால்தான், அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது உண்மையில் வேதனைக்குரிய விஷயம். ஒரு திறமையான நேர்மையான காவல் துறை உயர் அதிகாரியை இழந்தது மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவலர் நலவாழ்வுத் திட்டத்தை நிறுத்திவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இத்திட்டத்தை இந்த அரசு நீட்டித்திருந்தால், காவல் துறை உயர் அதிகாரி மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். எனவே, டிஐஜி விஜயகுமாரின் இறப்பு தற்கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.இதை சிபிஐ மூலம் விசாரிக்கப்பட வேண்டும்.

காரணம், காவல் துறை உயர் அதிகாரிகள், அவருக்கு குடும்பத்திலும், பணியிலும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்று கூறுகின்றனர். அப்படியென்றால், அவருக்கு எந்த வகையில் மன அழுத்தம் ஏற்பட்டது? எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று மக்கள் மத்தியில் மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது.

எனவே, இந்த அரசு, காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை மன அழுத்தம் ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அதுபோல், அதிமுக ஆட்சியில், பெங்களூருவைச் சேர்ந்த நிமான்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட காவலர் நலவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE