கும்பகோணம்: டெல்லி போராட்டத்தில் பங்கேற்க ரயிலில் புறப்பட்டுச் சென்ற விவசாயிகள்

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையிலான போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக விவசாயிகள் டெல்லி புறப்பட்டனர்.

விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாய விலை நிர்ணயிக்க வேண்டும், வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சாமிநாதன் பரிந்துரையை முழுமையாக செயல்படுத்த வேண்டும், நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 3500 விலை நிர்ணயிக்க வேண்டும், கரும்பிற்கு டன் ஒன்றிற்கு ரூ. 5 ஆயிரம் விலை நிர்ணயிக்க வேண்டும், 58 வயதைக் கடந்த ஆண்-பெண் விவசாயிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும், பயிர்க் காப்பீடு திட்டத்தின் பயனாளிகளுக்கு தாமதம் இல்லாமல் பயிர் மகசூல் இழப்பீட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு, தலைமையில் டெல்லியில் வரும் 11-ம் தேதி போராட்டம் நடைபெற உள்ளது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மகேந்திரன் தலைமையில், பழவாறு பாசன சங்கத் தலைவர் வீ.சாமிநாதன், ஒரத்தநாடு மனோகரன் உள்பட 27 பேர் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் சோழன் விரைவு ரயிலில் புறப்பட்டுச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE