முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையின் கடுமையான விதிகளை தளர்த்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படித்தவர்கள் மட்டும் தான் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்ற விதியை தளர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவம் (எம்.பி.பி.எஸ்) படித்தவர்கள் மட்டும் தான் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் (எம்.டி., எம்.எஸ்) உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இம்முடிவு தமிழக மாணவர்களுக்கு நன்மை செய்வதைப் போலத் தோன்றினாலும், ஒரு பிரிவு தமிழக மாணவர்களை இது கடுமையாக பாதிக்கும்.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்புகள் மற்றும் பட்டயப்படிப்பு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கை கடந்த 6ம் நாள் வெளியிடப்பட்டது. வரும் 13ம் நாள் வியாழக்கிழமை வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க கெடு வழங்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான தகுதிகளில் இளநிலை மருத்துவப் படிப்பையும், கட்டாயப் பயிற்சியையும் தமிழகத்தில் மேற்கொண்டவர்கள் மட்டும் தான் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்று விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒருவகையில் இது வரவேற்கத்தக்கது. தமிழக மாணவர்களுக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கிடைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் விருப்பம் தான் இதற்கு காரணம் என்பது புரிகிறது.

ஆனால், மருத்துவப் படிப்பில் அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்கள், புகழ்பெற்ற மத்திய மருத்துவக் கல்வி நிறுவனங்கள் உள்ள சூழலில், அவற்றில் படித்த தமிழக மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் இப்படி ஒரு முடிவை தமிழக அரசு எடுத்திருப்பது தவறானது. இந்த முடிவால் பாதிக்கப்படப் போவது தமிழக மாணவர்கள் தான். ஆம், தமிழக மாணவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் பிற மாநிலங்களில் இளநிலை மருத்துவம் படித்திருந்தால், அவர்களால், அவர்களின் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்ட தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளில் சேர முடியாது.

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழக மாணவர்கள், அதனடிப்படையில் தில்லி எய்ம்ஸ், சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுவை ஜிப்மர் உள்ளிட்ட புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கவே விரும்புவார்கள். அதேபோல், சிலர் குறைந்த மதிப்பெண் பெற்றாலும் அண்டை மாநிலங்களில் உள்ள மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பை படிப்பார்கள். அவர்களின் செயல் தவறு இல்லை; அதை எவரும் குறைகூற முடியாது.

பிற மாநிலங்களில் மருத்துவம் படித்தாலும், அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இளநிலை மருத்துவம் படித்து விட்டு தமிழகத்தில் தான் அவர்கள் பணியாற்றுவார்கள். பிற மாநிலங்களில் அவர்கள் மருத்துவம் படித்தது கூட, புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும், பிற மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் தான் இடம் கிடைத்தது என்பதாலும் தானே தவிர, தமிழகத்துக்கு எதிரான மனநிலையால் அல்ல. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களுக்கு சென்று மருத்துவம் பயில்வது குற்றம் அல்ல. அதை ஏதோ தமிழகத்துக்கு இரண்டகம் செய்வதைப் போல கருதிக்கொண்டு அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்பில் சேர வாய்ப்பளிக்க மறுப்பது நியாயம் அல்ல. அது காலப்போக்கில் தமிழத்துக்கு தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழகத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 600 மாணவர்கள் பிற மாநிலங்களுக்கு சென்று மருத்துவம் பயில்கிறார்கள். அதேபோல், சில நூறு பேர் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவப்படிப்பு படிக்கின்றனர். தமிழகத்தில் இளநிலை மருத்துவம் படித்தவர்கள் மட்டும் தான், தமிழக அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதுநிலை மருத்துவம் பயில முடியும் என்ற நிலை ஏற்பட்டால், வருங்காலங்களில் எய்ம்ஸ் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்தாலும் அவர்கள் அதை ஏற்க மாட்டார்கள்; அவர்களும் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலேயே இளநிலை மருத்துவம் படிக்க போட்டியிட்டால் போட்டி கடுமையாகும். நிறைவில், ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம் படிக்கும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை 1000 வரை குறையும். இது தமிழகத்துக்கு தான் பாதிப்பு.

மீண்டும் சொல்கிறேன்... தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவம் படித்தவர்கள் மட்டும் தான் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர முடியும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு பின்னால் உள்ள நோக்கம் பாராட்டத்தக்கது. ஆனால், அதுவே தமிழக மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அந்த விதியை, தமிழக கல்லூரிகளில் படித்த மாணவர்கள் என்பதற்கு மாற்றாக, தமிழக மாணவர்கள் என்று மாற்றினால் கூடுதல் பயன் கிடைக்கும். எனவே, அந்த விதியைத் தளர்த்தி பிற மாநிலங்களில் இளநிலை மருத்துவம் படித்த தமிழக மாணவர்களும் தமிழக அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதுநிலை மருத்துவம் பயில தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்