அஸ்தினாபுரம் - செம்பாக்கம் சாலையை மழை காலத்துக்குள் சீரமைக்க மக்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

செம்பாக்கம்: இந்து தமிழ் நாளிதழ் உங்கள் குரலில் தொலைப்பேசி வாயிலாக நந்தினி என்ற வாசகர் கூறியதாவது: அஸ்தினாபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, திருமலைநகர் வழியாக மேடவாக்கம், வேளச்சேரி பகுதிகளுக்கு, எளிதாக செல்லலாம். இதனால், எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிலவும் பகுதியாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்த சாலை தற்போது போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக மாறிசாலைகள், படுமோசமான நிலையில் உள்ளன.

தூசி மண்டலமாகவும் காட்சி அளிக்கிறது. லேசான மழைக்கே, குட்டைபோல் தண்ணீர் தேங்குகிறது. வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகின்றனர். இதனால் இந்தச் சாலையை வரும் மழைக்காலத்துக்குள் விரைவாக சீரமைக்க தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர் கூறியது: திருமலை நகர் சாலையில் கால்வாய் பணி ரூ. 3 கோடியே 40 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. அந்த பணி முடிந்தவுடன் அஸ்தினாபுரம் பேருந்து நிலையம் முதல் திருமலை நகர் வரை ரூ. 60 லட்சத்தில் சாலை சீரமைக்கப்படவுள்ளது.

மேலும் திருமலை நகரில் கால்வாய் ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி சாலை சேதமடைகிறது. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றி சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மழைக்காலத்துக்குள் பணிகள் முடிக்கப்படும். இவ்வாறு கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE