திருக்கழுகுன்றம் மலைக்கோயிலுக்கு ரோப் கார்: தாமதமாகும் திட்டம்

By கோ.கார்த்திக்

மாமல்லபுரம்: திருக்கழுகுன்றம் நகரில் பிரசித்திப் பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் அமைந்துள்ளது. இங்கு, மூலவர் சுயம்பு மூர்த்தியாகவும் மலையடி வாரத்தில் திரிபுரசுந்தரி அம்பாள் தனி சந்நிதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். மேலும், மலைக்கோயிலில் இருந்து கீழே இறங்கி வரும் பாதையில் பல்லவ மன்னர்களால் குடவரை சிற்பமாக அமைக்கபட்ட சிவாலயம் ஒன்றும் உள்ளது. இதனை, தொல்லியல் துறை பராமரித்து வருகிறது.

மலைமீது அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலில் உள்ள சிற்பங்களை கண்டு ரசிப்பதற்காக, வடமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து செல்கின்றனர். 600 அடி உயரத்தில் அமைந்துள்ள மலைக்கோயிலுக்கு செல்ல சுமார் 560 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். வாகனங்கள் மூலம் மலைமீது செல்ல பாதை வசதிகள் இல்லை. இதனால், வயது முதிர்ந்தோர் மற்றும் சிறுவர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே, மலைக்கோயிலுக்கு சென்று திரும்பும் வகையில் பாதை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என பக்தர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வேதகிரீஸ்வரர் கோயிலில் ரோப் கார் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து, வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக் கூறு தொடர்பாக சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளதாக அந்நிறுவனம் அரசுக்கு அறிக்கை அளித்தது. ஆனால், ரோப் கார் திட்டம் தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வருவதால் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என பக்தர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், கோயில் நிர்வாகத்தில் போதுமான நிதி வசதிகள் இல்லாததால், அரசின் சிறப்பு நிதியின் மூலம் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது விரைவில் ஒப்பந்தப் புள்ளி அறிவிக்கப்படும் என அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். ஆனாலும், திட்டப் பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

இந்நிலையில், ரோப் கார் திட்டப்பணிகளுக்காக சுமார் ரூ.14.50 கோடி மதிப்பில் திட்டமதிப்பீடு தயாரித்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அறநிலையத் துறை ஆணையரின் ஒப்புதலுக்கு அனுப்பியும், இதுவரையில் ஒப்புதல் கிடைக்காமல் காத்திருக்கும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. அதனால், திட்டத்தை விரைவாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர் வேலன் கூறியதாவது: ரோப் கார் திட்ட அறிவிப்பு வெளியாகி 2 ஆண்டுகள் கடந்தும் திட்டத்தை செயல்படுத்த தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. ரோப்கார் அமைக்கப்பட்டால், பக்தர்கள் எளிதாக மலைமீது சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியும். மேலும், திருக்கழுகுன்றம் ஆன்மிக சுற்றுலாதலமாக மாறும். இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளூரை சேர்ந்த ஜெயச்சந்திரன் கூறியதாவது: ரோப் கார் மட்டுமின்றி திருத்தணியில் செயல்படுத்தியுள்ளதை போன்று மலையின் மீது வாகனங்களில் செல்ல பாதை அமைக்க வேண்டும். அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என ஏற்கெனவே அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. அனைத்துதரப்பு மக்களும் மலைக்கு செல்லமுடியும். எனவே மலைப்பாதை அமைக்க அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து, அறநிலையத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு தமிழக அரசின் நிதி மூலம் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துகாக, ஏற்கெனவே ரூ.12 கோடி மதிப்பில் திட்டமதிப்பீடு தயாரித்து அனுப்பப்பட்டது.

தற்போது, மீண்டும் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு ரூ.14.50 கோடிக்கு மதிப்பீடு தயாரித்து, அறநிலையத் துறை ஆணையரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் சுப்பையா மடம் எதிரே உள்ள மலையடிவார பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் ரோப்கார் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறோம். இவ்வாறு கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE