மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை முறியடிக்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா நேற்று (ஜூலை-7) அம்மாநில சட்டமன்றத்தில் வரவு- செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது அவர், “மேகேதாட்டு அணை கட்ட ஒன்றிய அரசிடம் தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும். முதல் திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற ஒன்றிய அரசிடம் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அணைக்கு நிலம் கையகப்படுத்துவதே அரசின் முதன்மைப் பணி என்றும் கூறியுள்ளார். மேலும் மேகதாது அணைக்கு நிலம் கொடுக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும்” என்றும் முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம்,16.02.2018 இல் வழங்கிய தீர்ப்பிலும், காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு கர்நாடக மாநிலத்திற்கு எந்த உரிமையும் இல்லை. தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறாமல் எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது என்று தெளிவுபடுத்தப் பட்டிருக்கிறது. 2007, பிப்ரவரி 5 ஆம் தேதி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கு கர்நாடகா 192 டி.எம்.சி தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த 192 டிஎம்சி தண்ணீரை மாத வாரியாக எவ்வளவு பிரித்தளிக்க வேண்டும் என்றும் நடுவர் மன்றம் வரையறுத்தது. ஜூன் மாதத்தில் 10 டிஎம்சி, ஜூலையில் 34 டிஎம்சி, ஆகஸ்ட்டில் 50 டிஎம்சி, செப்டம்பரில் 40 டிஎம்சி, அக்டோபரில் 22 டிஎம்சி, நவம்பரில் 15 டிஎம்சி, டிசம்பரில் 8 டிஎம்சி, ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் தலா 2.5 டிஎம்சி என நீர்ப் பங்கீடு வரையறுக்கப்பட்டது.

ஆனால் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 16, 2018 இல் அளித்த தீர்ப்பில், கர்நாடகா, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை 177.25 டிஎம்சி ஆக குறைத்து உத்தரவிட்டது. நடுவர் மன்றம் வழிகாட்டுதல் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம், தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நீரை காவிரியில் திறந்துவிட கர்நாடக மாநிலத்திற்கு உத்தரவிட முடியாத கையறு நிலையில்தான் இயங்கி வருகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறக்கப்பட வேண்டும். ஆனால், 2.83 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான 6.357 டிஎம்சி தண்ணீரை இன்னும் கர்நாடகா தரவேண்டியுள்ளது. காவிரியிலிருந்து ஜூலையில் 31.24 டிஎம்சியும், ஆகஸ்டில் 45.95 டிஎம்சியும் கர்நாடகா தர வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களுக்கான தண்ணீரை பெற்றுத்தந்தால் மட்டுமே குறுவை சாகுபடி செய்யமுடியும் என்று காவிரிப் படுகை விவசாயிகள் கவலையுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மேகேதாட்டு அணை கட்டப்படுமானால், காவிரிப் படுகைப் பகுதிகள் பாலைவனம் ஆகி விடும். எனவே ஒன்றிய அரசு மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கக் கூடாது. தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை விரைவுப் படுத்தி, கர்நாடகா மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை முறியடிக்க வேண்டும்." இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்