ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை - தலைமை நீதிபதி அமர்வு கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது என்று தெரிவித்த நீதிபதிகள், அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதால் உங்களுக்கு என்ன பாதிப்பு என்று, மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். அவரிடம் இருந்த மின்சாரத்துறை, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை, அமைச்சர் முத்துசாமியிடமும் தரப்பட்டுள்ளது.

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை ஏற்க முடியாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதாக தமிழக அரசு கடந்த ஜூன் 16-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை ரத்துசெய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல, செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்தன், கொளத்தூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் ஆகியோரும் தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதற்கிடையே, அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த வாரம் உத்தரவிட்டார். சிறிது நேரத்தில், அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநர் அவ்வாறு நிறுத்தி வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தொடர்ந்தார்.

தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது நடந்த வாதம்:

மனுதாரர் எம்.எல்.ரவி தரப்பு: அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அந்த உத்தரவை நிறுத்தி வைக்கவோ, திரும்ப பெறவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.

நீதிபதிகள்: ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. அதுதொடர்பாக ஏதேனும் முன்மாதிரி தீர்ப்புகள் இருந்தால், மனுதாரர் தாக்கல் செய்ய வேண்டும்.

மனுதாரர்: அமைச்சரவையில் செந்தில் பாலாஜி தொடர்ந்து இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார், மக்களின் வரிப் பணத்தில் அவருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இவ்வாறு வாதம் நடந்தது.

இதையடுத்து, ‘‘செந்தில் பாலாஜி தற்போது எம்எல்ஏவாக இருக்கிறார். அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதால் உங்களுக்கு என்ன பாதிப்பு?’’என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அனைத்து வழக்குகளையும் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE