தமிழகத்தில் உடனடியாக பருத்தி கொள்முதலை தொடங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் பருத்தி கொள்முதலை உடனடியாக தொடங்குவதுடன், குறைந்தபட்ச ஆதரவு விலையை ஜூன் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பருத்தியின் விலை நடப்பு அறுவடைப் பருவத்தில், கடும் வீழ்ச்சியடைந்துள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் பருத்தி விவசாயிகள் எதிர்கொண்டுள்ள மோசமான நிலை குறித்து தங்களின் கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.

பருத்தி விலை சரிவு: கடந்த ஆண்டு பருத்தி விவசாயிகள், குவிண்டால் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் என்ற வீதத்தில் பருத்தியை விற்பனை செய்து அதிக லாபம் ஈட்ட முடிந்தது. அதனால் உற்சாகமடைந்த பெரும்பாலான விவசாயிகள், இந்த ஆண்டும் பருத்தி சாகுபடியைத் தேர்வு செய்தனர். இந்நிலையில், தற்போது பருத்தியின் விலை, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,500 என கடுமையாக சரிந்துள்ளது. இதனால், விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

வேளாண் விளைபொருட்களின் சந்தை விலையை நிலைப்படுத்துவதில், மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை முக்கியப் பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய பருத்திக் கழகத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல் நடவடிக்கைகள் பருத்தி விலையை நிலைப்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக இருந்து வந்தது.

மத்திய அரசு 2023-24 -ம் ஆண்டுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக நடுத்தர இழை பருத்திக்கு குவிண்டால் ரூ. 6,620 எனவும், நீண்ட இழை பருத்திக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7,020 என்றும் நிர்ணயித்துள்ளது.

2 பருவங்களில் சாகுபடி: தமிழகத்தில் பருத்தி சாகுபடிக்கு நஞ்சை தரிசு, கோடை இறவை என இரண்டு தனித்துவமான பருவங்கள் உள்ளன. அதன்படி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விதைப்பு செய்யப்பட்டு, ஜூன் முதல் வாரத்தில் இருந்து பருத்தி அறுவடை செய்யப்படுகிறது. இந்த இரண்டு பருவங்களிலும் 84 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது.

தற்போது நஞ்சை தரிசு பருத்தி அறுவடை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக பருத்தி விவசாயிகள், பருத்தி விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,500 ஆகக் குறைந்துள்ளதை கருத்தில்கொண்டு, தமிழகத்தில் பருத்திக் கொள்முதல் நடவடிக்கைகளை இந்திய பருத்திக் கழகம் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலையை இனி ஜூன்1-ம் தேதியில் இருந்து அமல்படுத்தும்படியும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் பருத்தி கொள்முதலை உடனடியாகத் தொடங்க இந்திய பருத்திக் கழகத்துக்கு உத்தரவிட வேண்டும். பருத்திக்கான காரீப் குறைந்தபட்ச ஆதரவு விலையை இனிவரும் காலங்களில் ஜூன் 1 முதல் நடைமுறைக்குக் கொண்டுவர வேளாண்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

உரிய நிவாரணம் கிடைக்க: பருத்தி விலையை நிலைப்படுத்துவதன் மூலமும், விவசாயிகளுக்கு அவர்கள் விளைவித்த விளைபொருட்களுக்கு நியாயமான வருமானத்தை உறுதி செய்வதன் மூலமும், மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள பருத்தி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பருத்திக்கான காரீப் குறைந்தபட்ச ஆதரவு விலையை இனிவரும் காலங்களில் ஜூன் 1 முதல் நடைமுறைக்குக் கொண்டுவர வேளாண் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE