மதுரை | சாலைகளில் உள்ள மண் மேடுகள், பள்ளங்களால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை நகரில் பாதாளசாக்கடைக்காகவும், பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக தோண்டிய குழிகளை ஒப்பந்தப் பணியாளர்கள் முறையாக மூடாமல் சென்றுவிடுதால் சாலைகளில் மண் மேடுகளும், பள்ளங்களும் காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சாலைகளில் பயணிபதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை, பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் நடக்கின்றன. இந்த இரு பணிகளையும் முடிந்த சாலைகள், தெருக்களில் மட்டுமே மாநகராட்சி புதிய சாலைகளை போடுகிறது. முதற்கட்டமாக பாதாள சாக்கடைப் பணிக்காக சாலைகளையும், தெருக்களையும் ஜேசிபிகளை கொண்டு தோண்டும் டெண்டர் எடுத்த நிறுவனத்தின் ஒப்பந்தப் பணியார்கள், அதன் குழாய்களையும், தொட்டிகளையும் பதிக்க 2 முதல் 3 மாதம் காலம் எடுத்துக் கொள்கின்றனர்.

அதன்பிறகு பாதாள சாக்கடை தொட்டிகளில் இருந்து வீடுகளுக்கு இணைப்புகள் வழங்குகின்றனர். பாதாள சாக்கடைப்பணி முடிந்தபிறகு, அதே சாலைகளை மீண்டும் ஜேசிபியை கொண்டு பெரியாறு கூட்டுக்குடிநீர் குழாய் பதிக்க தோண்டுகின்றனர். அதன்பிறகு சாலைகள், தெருக்களில் உள்ள குடிநீர் விநியோக மெயின் குழாயில்களில் இருந்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குகின்றனர். இந்த பணிகளை முடிக்க 2 முதல் 3 மாதம் எடுத்துக் கொள்கின்றனர்.

இப்படி ஒவ்வொரு சாலையும், தெருக்களையும் மாநகராட்சி முழுவதும், இரு பணிகளையும் டெண்டர் எடுத்த நிறுவனத் தொழிலாளர்கள் தோண்டிப்போடுகின்றனர். எனினும், தோண்டிய குழிகளை சரியாக மூடுவதில்லை. மேலும் மேடு, பள்ளமாக சாலைகளையும், தெருக்களையும் விட்டு செல்கின்றனர். மழைக்கு சேறும், சகதியுமாக மாறும் இந்த சாலைகள், வெயில் காலத்தில் மண் மேடாகவும், பள்ளமாகவும் மாறி வாகனங்களில் மக்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளன. இரவில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். நடந்து சென்றால் கூட பள்ளங்களில் கால் இடறி தடுமாறி கீழே விழுகின்றனர்.

இரு பணிகளுக்கும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு உடனுக்குடன் நிதி வழங்கப்படுகிறது. அதனால், அந்த ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்கள், நினைத்தால் கூடுதல் தொழிலாளர்களை பணியமர்த்தி இப்பணிகளை மிக விரைவாக முடித்து புதிய சாலைகளை போடுவதற்கு மாநகராட்சிக்கு உதவலாம். ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்களுக்கு போதிய தொழிலார்கள் கிடைக்கவில்லை. குறைந்த கூலிக்கு வடமாநில தொழிலாளர்களை வரவழைத்து இப்பணிகளை மேற்கொள்கின்றனர்.

தொழிலாளர்கள் பற்றாக்குறையாலே மதுரையில் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளும், பாதாள சாக்கடை திட்டப் பணிகளும் மந்தமாக நடக்கின்றன. மாநகராட்சி நிர்வாகம், அரசியல் பின்னணியுடன் ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்களை கண்டிக்க தயங்கி வேடிக்கைப்பார்ப்பதால் மதுரை மாநகர சாலைகள் மக்கள் பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் மண் மேடுகளாகவும், பள்ளங்களாகவும் காணப்படுகின்றன.

புதிய சாலைகளை போடுவதற்கு தாமதமாகும் நிலையில் குறைந்தப்பட்சம் குழி தோண்டிய சாலைகளை முறையாக மேடு, பள்ளம் இல்லாமல் முறையாக சீரமைத்தாலே மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால், அதை கூட செய்ய மறுப்பதால் தினமும் ஆங்காங்கே மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டம், மேயர் முற்றுகை, கவுன்சிலர்கள் சிறைப்பிடிப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE