மேட்டூர் காவிரி பாலத்தில் விதிமீறிச் செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் காவிரி பாலத்தில் விதிமீறிச் செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

மேட்டூர் காவிரி பாலம் மிகவும் பழமையானது ஆகும். இந்த பாலத்தின் வழியாகத் தான் தொடக்கத்தில் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் சேலம் கேம்ப், மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவந்தன. இந்த பாலம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் வலுவிழுந்தது. இதையடுத்து பாலம் சீரமைக்கப்பட்டு 2003-ம் ஆண்டு முதல் இலகு ரக வாகனப் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பாலத்தை முறையாகப் பராமரிக்காததால் ஆங்காங்கே செடிகள் முளைத்துள்ளன. சாலைகள் சிதிலமடைந்துள்ளன. கனரக வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்டவை அனல் மின் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய பாலம் வழியாக சென்று வர வேண்டும். மேலும், காவிரி பாலத்தின் இரு வழிகளிலும் கனரக வாகனங்கள் செல்வதைத் தடுக்க குறிப்பிட்ட உயரத்தில் கம்பிகள் அமைக்கப்பட்டன. இந்த கம்பிகளை மர்ம நபர்கள் அகற்றி விட்டனர். இதை போலீஸார் கண்டு கொள்ளாமல் விட்டு சென்றனர்.

இதைப் பயன்படுத்தி கொண்டு விதிமீறி இரவு நேரங்களில் மட்டுமே சென்ற கனரக வாகனங்கள் தற்போது பகலிலேயே செல்கின்றன. இதனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் ஆகியவை செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும், கனரக வாகனங்கள் செல்லும் போது, இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஒதுங்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ‘காவிரி பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதைத் தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலத்தின் தடுப்புக் கம்பிகளை சீரமைக்க வேண்டும்’ என கோரிக்கை எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE