பின்தங்கிய ஒரு மாநிலம் இருந்தாலும்கூட, அது நாட்டின் வளர்ச்சிக்கு நஷ்டம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: இந்தியாவில் பின்தங்கிய ஒரு மாநிலம் இருந்தாலும் கூட அது நாட்டின் வளர்ச்சிக்கு நஷ்டத்தைதான் உருவாக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் வங்கிகள் மூலம் பல்வேறு திட்டங்களில் 1.42 லட்சம் பேருக்கு 2,628 கோடி ரூபாய்க்கான கடனுதவிகளை வழங்கும் நிகழ்வு லாஸ்பேட்டையில் இன்று மாலை நடந்தது. இந்நிகழ்வில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் இருந்து 8 ஆயிரத்தும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டு பேசியதாவது: பிரதமர் மோடி நாடு முழுவதும் இருக்கக்கூடிய ஏழை, எளிய மக்களுக்கு வங்கிகள் மூலம் குறைந்தபட்ச வட்டியில் தொழில் நடத்துவதற்கான முதலீடு வழங்க பலவித திட்டங்கள் வகுத்துள்ளார். ஆனால், தொழில் ரீதியாகவும், வீடு கட்டுவதுக்கும் கொடுக்கப்படும் நிதி அனைவருக்கும் சமயத்தில் கிடைக்கிறதா அல்லது துண்டு துண்டாக கிடைக்கிறதா என்று சந்தேகத்தால் அந்தந்த மாநிலத்திற்கு போய் எவ்வளவு பேருக்கு நிதி கிடைத்தது, எவ்வளவு பேருக்கு நிதி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று ஆலோசிக்கிறோம்.

ஒரு திட்டம் 100 பேருக்கு கிடைக்க வாய்ப்பு இருந்தால், அந்த 100 பேருக்கும் இந்த ஆண்டே கிடைக்க வேண்டும். அதன்படி, புதுச்சேரிக்கு நான் முன்னின்று கடந்த பிப்ரவரி மாதம் முதல் புதுச்சேரி அரசுடன் பேசி அதிகாரிகள் மற்றும் வங்கிகள் மூலமாக மக்களை தொடர்பு கொண்டு இன்று கடனுதவி வழங்குகிறோம். 100ல் 98 சதவீதத்துக்கு வந்துள்ளோம். மீதம் 2 சதவீதத்தையும் எட்ட வேண்டும்.

இன்று 22 திட்டங்கள் புதுச்சேரியில் உள்ள மக்களில் 100ல் 98 பேரை சென்றடைந்துள்ளது என்று நம்பிக்கையோடு கூறுகிறேன். அந்த வகையில், இன்று 1,41,834 பேருக்கு கடனுதவி வழங்க ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளோம். புதுச்சேரியில் வாழும் மக்களுக்கு ரூ.2,600 கோடிக்கு மேல் கடனுதவி அவர்களது வங்கி கணக்கில் செலுத்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. கடனுதவிக்காக வங்கி அதிகாரிகளின் பின்னாடி மக்கள் சுற்றிக் கொண்டிருக்க கூடாது.

எல்லா மாநிலமும் முன்னேற வேண்டும். எந்த ஒரு மாநிலமும் பின்தங்கி இருக்கக் கூடாது. பின்தங்கிய ஒரு மாநிலம் இருந்தாலும் கூட அது நாட்டின் வளர்ச்சிக்கு நஷ்டத்தைதான் உருவாக்கும். அந்த பாதையில் நாம் முன்னேற முடியாது. அதனால் எல்லா மாநிலமும் முன்னேற வேண்டும். அதிலும் ஏழை, எளிய மக்கள், பெண்களுக்கு கிடைக்க வேண்டியது சமயத்தில் கிடைக்க வேண்டும். அதுதான் நம்முடைய அரசாங்கம் செய்ய வேண்டிய மக்கள் சேவை என பிரதமர் கூறுவார். அதன்படி, இன்று புதுவையில் 100ல் 98 பேருக்கு திட்டங்கள் கிடைத்ததாக நினைக்கிறேன்" என்றார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசுகையில், "புதுச்சேரி அரசு நம்மை விட பெரிய மத்திய அரசோடு சேர்ந்து யானை பலம், குதிரை பலம் தாண்டி அசுர பலம் பெற்றுள்ளது. 13 ஆண்டுகளுக்கு பிறகு முழு பட்ஜெட் தாக்கலாகியுள்ளது. இதற்கு மத்திய அரசு வழிகாட்டுதல்தான் காரணம். முத்ரா வங்கி கடன் மூலம் 23 லட்சம் கோடி கடன் தரப்பட்டுள்ளது. கடன் பெற்றவர்களில் 69 சதவீதம் பேர் பெண்கள்.

புதுச்சேரியில் நிதி அதிகரித்து தரப்பட்டுள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து டபுள் என்ஜின் போல் அரசை எடுத்து செல்கிறது. வந்தே பாரத் ரயில்போல் புதுச்சேரி வளர்ச்சி அடைந்து வருவதுக்கு மத்திய அரசின் உதவிகள் ஓர் காரணம். பெஸ்ட் புதுச்சேரி தற்போது மத்திய அரசு உதவியால் வேகமாக வளரும் புதுச்சேரியாக மாறி வருகிறது" என்றார்.

முன்னதாக முதல்வர் ரங்கசாமி பேசுகையில், "தொழில் தொடங்க வங்கிகளை நாடினால் அதிக சிரமம் ஏற்பட்டு வந்தது. அதை மாற்றி எளிதாக கடன் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் வங்கிகளில் வாங்கிய கடனையும் திருப்பி செலுத்த வேண்டும். அவ்வாறு செய்தால்தான் அனைவருக்கும் கடன் தர இயலும்" என்று குறிப்பிட்டார். நிகழ்வில் பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE