தமிழகத்தில் பருத்தி கொள்முதல் நடவடிக்கைகளை உடனடியாக தொடங்கிடுக: பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் பருத்திக் கொள்முதல் நடவடிக்கைகளை இந்திய பருத்திக் கழகம் உடனடியாகத் தொடங்கிடவும், பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை இனி ஜூன் 1-ம் தேதியில் இருந்து அமல்படுத்தக் கோரியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் பருத்தி கொள்முதலைத் தொடங்கிடவும், பருத்திக்கான காரீப் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஜூன் 1 முதல் நடைமுறைக்குக் கொண்டுவரக் கோரியும், பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 7) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், நடப்பு அறுவடைப் பருவத்தில், பருத்தியின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் பருத்தி விவசாயிகள் எதிர்கொண்டுள்ள மோசமான நிலை குறித்து பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவருவதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பருத்தி விவசாயிகள், குவிண்டால் ஒன்றுக்கு 12,000 ரூபாய் என்ற வீதத்தில் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனை செய்து அதிக லாபம் ஈட்ட முடிந்தது என்றும், அதனால் உற்சாகமடைந்த பெரும்பாலான விவசாயிகள், இந்த ஆண்டும் பருத்தி சாகுபடியைத் தேர்வு செய்தனர் என்றும் தெரிவித்துள்ள முதல்வர், தற்போது பருத்தியின் விலை, குவிண்டால் ஒன்றுக்கு 5,500 ரூபாய் எனக் கடுமையாக சரிந்துள்ளதால், விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வேளாண் விளைபொருட்களின் சந்தை விலையை நிலைப்படுத்துவதில், ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை முக்கியப் பங்கு வகிப்பதாகவும், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய பருத்திக் கழகத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல் நடவடிக்கைகள் பருத்தி விலையை நிலைப்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ள முதல்வர், ஒன்றிய அரசு 2023-2024 ஆம் ஆண்டுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக நடுத்தர இழை பருத்திக்கு குவிண்டால் ஒன்றுக்கு 6,620 ரூபாய் எனவும், நீண்ட இழை பருத்திக்கு குவிண்டால் ஒன்றுக்கு 7,020 எனவும் நிர்ணயித்துள்ளதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் பருத்தி சாகுபடிக்கு நஞ்சைத் தரிசு, கோடை இறவை, என இரண்டு தனித்துவமான பருவங்கள் உள்ளன என்றும், அதன்படி பிப்ரவரி-மார்ச் மாதங்களில் விதைப்பு செய்யப்பட்டு, ஜூன் முதல் வாரத்தில் இருந்து பருத்தி அறுவடை செய்யப்படுகிறது என்றும், இந்த இரண்டு பருவங்களிலும் சுமார் 84,000 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது என்றும் முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நஞ்சைத் தரிசுப் பருத்தி அறுவடை முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்திலுள்ள பருத்தி விவசாயிகள், பருத்தி விலை குவிண்டால் ஒன்றுக்கு 5,500 ரூபாயாகக் குறைந்துள்ளதைக் கருத்தில்கொண்டு, தமிழகத்தில் பருத்திக் கொள்முதல் நடவடிக்கைகளை இந்திய பருத்திக் கழகம் உடனடியாகத் தொடங்கிட வேண்டுமென்றும், பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை இனி ஜூன் 1ம் தேதியில் இருந்து அமல்படுத்தக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு குறுவை நெல் பருவம் ஒரு மாதம் முன்னதாகவே தொடங்கியபோது நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒரு மாதம் முன்னதாகவே நடைமுறைப்படுத்தி அளித்த ஆதரவை நன்றியுடன் இத்தருணத்தில் நினைவுகூர்வதாகத் தெரிவித்துள்ள தமிழக முதல்வர், தமிழகத்தில் பருத்தி கொள்முதலை உடனடியாகத் தொடங்கிட இந்திய பருத்திக் கழகத்துக்கு உத்தரவிடுமாறும், பருத்திக்கான காரீப் குறைந்தபட்ச ஆதரவு விலையை இனி வருங்காலங்களில் ஜூன் 1ம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டுவர வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்துக்கு உத்தரவிடுமாறும் பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

பருத்தி விலையினை நிலைப்படுத்துவதன் மூலமும், விவசாயிகளுக்கு, விளைவித்த விளைபொருட்களுக்கு நியாயமான வருமானத்தை உறுதி செய்வதன் மூலமும், மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள பருத்தி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் என்றும் தனது கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

6 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்