ரூ.1000 மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.5 கோடி விண்ணப்பங்கள் எதிர்பார்ப்பு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" திட்டத்தின் பயன்களைப் பெற கிட்டத்தட்ட ஒன்றரை கோடி விண்ணப்பங்கள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உன்னதமான திட்டத்தை எந்த விதமான புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்று அதிகாரிகள் தொடங்கி அலுவலர்கள் வரை அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் தலைமையில், மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தனது முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, கலந்துகொண்டு முதல்வர் பேசியது: "தமிழ அரசினுடைய நிர்வாக வரலாற்றில் மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும் இவ்வளவு பெரிய திட்டம் இதுவரை உருவாக்கப்பட்டது இல்லை என்று சொல்லும் வகையிலான மாபெரும் திட்டத்தை தொடங்குவதற்கான முதற்கட்டக் கூட்டம் இது.

தலைமுறை தலைமுறைக்குப் பயனளிக்கப் போகிற இந்த மகத்தான திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்டம் வகுப்பதற்காக நாம் கூடியிருக்கிறோம்.‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நோக்கத்துடன் செயல்படும் நமது ‘திராவிட மாடல்’ அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் ஒரு பொதுநோக்கு உண்டு. அதுதான் சமூகநீதி. நீதிக்கட்சி காலம் தொடங்கி இன்றுவரை தமிழகத்தை வழி நடத்தும் கோட்பாடுதான், சமூகநீதி. இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட அரசையும், அதன்மூலம் பல புதுமையான, புரட்சிகரமான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி, சமத்துவ சமூகத்தை உருவாக்குவதில் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட மாநிலம் தமிழகம்.

தமிழகத்தில் இத்தகைய ஒரு மாபெரும் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தினை வெற்றிகரமான ஒரு திட்டமாகச் செயல்படுத்திக் காட்டுவதில், மாவட்ட ஆட்சித் தலைவர்களாகிய உங்களின் பங்கு முக்கியமானது.இந்தத் திட்டம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் நாளன்று தொடங்கப்படவுள்ளது. இன்னும் 2 மாத காலமே உள்ளதால், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இதனை தங்களது தலையாய பணியாகக் கொண்டு, கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு, திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட உறுதுணையாக இருக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரையில், இத்திட்டத்திற்கென வகுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உரிய பயனாளிகளைக் கண்டறிவதில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால், இந்தத் திட்டத்தின் பயன்களைப் பெற கிட்டத்தட்ட ஒன்றரை கோடி விண்ணப்பங்கள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.விண்ணப்பங்களைப் பெற பொது விநியோகக் கடைதோறும் சிறப்பு முகாம்களை நீங்கள் நடத்திட வேண்டும். இம்முகாம்களில், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நிகழாமல் பார்த்துக் கொள்ளவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நீங்கள் செய்திடவேண்டும்.

சமுதாயத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களாகிய சாலையோரங்களில் குடியிருப்போர், பழங்குடியினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர ஆதரவற்றோர் இந்தத் திட்டத்தில் பயன் அடைவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும். அவர்களிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற தரவுகள் இல்லையென்றாலும் கூட, அவற்றைப் பெறுவதற்கு உரிய வழிவகை செய்து, இந்த மகளிர் உதவித் தொகை அவர்களுக்குக் கிடைப்பதற்கு உதவி புரிய வேண்டும்.

தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவில் இந்தத் திட்டத்தைக் கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும் ஏற்படுத்தப்படவுள்ள மாநிலக் கண்காணிப்புக்குழு, தேவைப்படும் ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்திட வேண்டும்.இந்த மகத்தான திட்டத்தின் மூலம், தமிழகத்தில் உள்ள மகளிரின் சமூகப் பொருளாதார நிலைமை பெருமளவில் மேம்படும் என நான் உறுதியாக நம்புகிறேன்.மறைந்த முதல்வர் கருணாநிதியின் வழியில் செயல்படும் நமது அரசு, மகளிர் வாழ்வில் என்றென்றும் ஒளியேற்றிடும் விளக்காக அமையும் என இந்த நேரத்தில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற சிறந்த, உன்னதமான, முன்னோடித் திட்டங்களின் மூலம் தமிழகத்தை ஒன்றிய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் முதல் மாநிலமாக மாற்றிடுவோம், அதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம். எந்தத் திட்டமாக இருந்தாலும் அதனை அறிவிப்பது எளிது. செயல்படுத்துவது கடினம். முறையாகத் திட்டமிட்டால் செயல்படுத்துவதும் எளிதாகும். என்ன செய்கிறோம் என்பதற்கு இணையானது எப்படிச் செய்கிறோம் என்பதாகும்.

"கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" என்ற உன்னதமான திட்டத்தை எந்த விதமான புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்று அதிகாரிகள் தொடங்கி அலுவலர்கள் வரை அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.இது சம்பந்தமாக ஏதாவது உதவி தேவையாக இருந்தாலோ, சந்தேகம் இருந்தாலோ, முதல்வர் அலுவலகத்தையோ, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ள அமைச்சர் உதயநிதியையோ அல்லது என்னையோ கூட எந்த நேரமானாலும் தொடர்புகொள்ளுங்கள்.

"கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது" ஒரு கோடிப் பெண்களின் வாழ்க்கைக்கு உதவி செய்யும் உயிர்த் தொகை. அதனை மனதில் வைத்து அனைவரும் அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்" என்று முதல்வர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE