செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீட்டிக்கலாம்: ஐகோர்ட் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கின் விசாரணையை ஜூலை 11 மற்றும் 12ம் தேதிகளில் நடத்தப்படும் என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீட்டித்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இரு நீதிபதிகள் அமர்வில், எந்தெந்த கருத்துக்களில் இரு நீதிபதிகளும் முரண்பட்டுள்ளனர் என்பது குறித்து மேகலா தரப்பிலும், அமலாக்கத் துறை தரப்பிலும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிட்ட பின், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தானா? அமலாக்கத் துறைக்கு காவலில் வைத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா? மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவலில் இருந்த காலமாக கருத முடியுமா உள்ளிட்ட அம்சங்களில் இரு நீதிபதிகளும் முரண்பட்டுள்ளதாக அந்த அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "கைதுக்கான காரணங்களை மூத்த நீதிபதியான நிஷாபானு கையாளவில்லை. இளைய நீதிபதியான பரத சக்கரவர்த்தி அதை கையாண்டுள்ளார். எனவே, இந்த அம்சத்தில் நீதிபதிகள் முரண்பட்டுள்ளனர் என்று கூறமுடியாது. அதேபோல கைது செய்யும் முன் நோட்டீஸ் அனுப்ப வகை செய்யும் குற்ற விசாரணை முறைச் சட்டம் 41 ஏ பிரிவு, அமலாக்கத் துறைக்கு பொருந்துமா என்பது குறித்து இரு நீதிபதிகளும் கருத்து தெரிவிக்காத நிலையில் அதுகுறித்த வாதங்களை முன் வைக்கக்கூடாது" என்று வாதிட்டார்.

அப்போது, மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இது தொடர்பான வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, "வழக்கில் இறுதி முடிவெடுக்க, செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை, நீதிமன்ற காவல் காலமாக கருதலாமா? கூடாதா? என மூன்று கேள்விகளை தீர்மானித்து, இந்த அம்சங்கள் குறித்து வாதங்களை முன்வைக்கலாம் என அறிவுறுத்தி, விசாரணையை ஜூலை 11, மற்றும் 12ம் தேதிகளுக்கு ஒத்திவைத்தார்.

மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூலை 12-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், அவருக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம், காவல் நீட்டிப்பு வழங்கலாம் எனவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE