ஜாமீனை ரத்து செய்யக் கோரும் போலீஸ் மனு: பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா பதிலளிக்க கோர்ட் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை : தமிழக பாஜக செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு அவரது தரப்பில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக மாநில செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி.சூர்யா. சென்னையை சேர்ந்தவர். இவர் மீது மார்க்சிஸ்ட் கட்சி குறித்தும், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்தும் ட்விட்டரில் பொய்யான தகவல் பதிவிட்டதாக மதுரை சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் சூர்யாவை மதுரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் சூர்யா ஜாமீன் பெற்றார். அப்போது அவர், மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 30 நாட்கள் தினமும் காலையில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்தார்.

நீதிமன்ற நிபந்தனையின் பேரில் சூர்யா மதுரையில் தங்கியிருந்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சில நாட்கள் கையெழுத்திட்டார். ஜூலை 2-ம் தேதியிலிருந்து அவர் கையெழுத்திடவில்லை. ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரி அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.

இந்நிலையில், சூர்யாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி மதுரை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் போலீஸார் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி டீலாபானு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் சூர்யா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 10-க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE