சென்னை அருகே மெகா விளையாட்டு நகரம்: சாத்தியக்கூறுகள் உள்ள 3 இடங்கள் தேர்வு

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: சென்னை அருகே மெகா விளையாட்டு நகரம் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ள 3 இடங்கள் குறித்த அறிக்கையை சிஎம்டிஏ அதிகாரிகள், விளையாட்டுத் துறையிடம் வழங்கியுள்ளனர். அதன்படி செம்மஞ்சேரி, குந்தம்பாக்கம், வண்டலூர் ஆகிய 3 இடங்களில் மெகா விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’ எனும் மெகா விளையாட்டு நகரத்தை நிர்மாணிக்கும் திட்டத்தைத் தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. சர்வதேச தரத்தில் அமையவுள்ள இந்த விளையாட்டு நகரத்தின் ஆயத்த பணிகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் தொடங்கியுள்ளது.

இந்த விளையாட்டு நகரத்தில் ஒரேநேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன. மேலும், சர்வதேச அளவில் போட்டிகள் நடைபெறும்போது வெளிநாட்டு வீரர்கள் வந்து செல்ல வசதியாக சென்னை விமான நிலையத்துக்கு அருகே இந்த விளையாட்டு நகரத்தை அமைக்கவும் அரசு திட்டமிட்டிருந்தது.

இங்கு நீச்சல் வளாகம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், வாலிபால், ஜிம்னாஸ்டிக் பயிற்சிக் கூடங்கள், ஹாக்கி ஸ்டேடியம் என 20-க்கும் மேற்பட்ட விளையாட்டு அரங்குகள் அமையவுள்ளன. மேலும், இந்த வளாகத்தில் வீரர்கள் தங்கி பயிற்சி எடுக்கும் வகையில் பயிற்சிக் கூடங்கள், தங்கும் அறைகள், பணியாளர்களுக்கான குடியிருப்புகள், உணவகங்கள், ஓடுதளங்கள் உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய டெண்டர் மூலம் நிபுணர் குழுவை நியமிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற அரசின் முத்திரைத் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி அமையவுள்ள இடங்கள் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு முதல்வர் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, இது தொடர்பான ஆய்வுக் கூட்டம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மெகா விளையாட்டு நகரம் அமைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள 3 இடங்கள் குறித்த அறிக்கையை சிஎம்டிஏ அதிகாரிகள் வழங்கினர். இதன்படி, செம்மஞ்சேரி, குந்தம்பாக்கம், வண்டலூர் ஆகிய 3 இடங்களில் மெகா விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE