நினைவலைகள் | “என் இலக்கை அடைய தாமதாகிவிட்டது...” - சொந்த ஊர் தேனியில் டிஐஜி விஜயகுமார் பகிர்ந்தவை

By என்.கணேஷ்ராஜ்

தேனி: கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டி ஆகும். அப்பா செல்லையா ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். அம்மா ராஜாத்தி பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்தவர். பள்ளிப் படிப்பை தேனி நாடார் சரசுவதி மேல்நிலைப் பள்ளியில் முடித்துள்ளார். அரசின் உயர் பதவிக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் சிறிய வயதிலேயே இவரிடம் இருந்துள்ளது. ஆகவே, குரூப் 1 தேர்வு எழுதி 2003-ம் ஆண்டு டி.எஸ்.பியாக பணியில் சேர்ந்தார். ஆனாலும் உயர் பதவிக்குச் செல்லும் நோக்கில் 2009-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ் ஆக தேர்வானார்.

காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி உள்ளார். பின் சிபிசிஐடி எஸ்பியாக தனது பணியை தொடர்ந்தார். இந்த காலகட்டத்தில் டி.என்.பி.எஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு உடனடியாக குற்றவாளிகளை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நீட்தேர்வு முறைகேடு குறித்த விசாரணையிலும் இவர் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். குறிப்பாக, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 2019-ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடு செய்த மாணவர்கள் சேர்ந்திருந்தனர். அதுகுறித்து வழக்கில் இவர் தீவிரம் காட்டியதில் ஏராளமான மாணவர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைந்தது.

இதையடுத்து, சென்னை அண்ணா நகர் துணை ஆணையராக பணிபுரிந்தார். இவர் அண்ணாநகர் துணை ஆணையராக இருந்தபோது அரும்பாக்கத்தில் நடந்த வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை 40 மணி நேரத்துக்குள் கைது செய்தார். இது காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 6-ம் தேதி மாதம் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று கோவை சரக டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்தார்.

விஜயகுமார் ஆன்மிகத்திலும் ஈடுபாடு உள்ளவர். கடந்த 2019-ம் ஆண்டு தான் படித்த தேனி நாடார் சரசுவதி மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது:

“அரசின் கடைநிலை ஊழியரான அப்பாவைப் பார்த்துப் பார்த்தே வளர்ந்ததால், மாவட்ட அளவு அதிகாரம் படைத்த ஓர் அரசு அதிகாரி ஆகணும்னு அடிக்கடி எனக்குத் தோணும். இதற்கு ஐ.பி.எஸ். பதவி உதவிகரமாக இருக்கும் என்பதால் அதை நோக்கி பயணித்தேன். இலக்கை நோக்கி செல்கையில் சிரமங்கள் ஏற்படலாம். அப்போது மனச்சோர்வோ, சகிப்புத்தன்மையிலே இலக்கை மறந்து முடிவு எடுக்கக் கூடாது. எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது. ஐபிஎஸ் நோக்கி பயணிக்கையில் குரூப்1 தேர்வு என்று திசைமாறி பயணித்துவிட்டேன். இதனால் என் இலக்கை அடைய தாமதாகிவிட்டது” என்று மாணவர்களுக்கு அப்போது அறிவுரை வழங்கினார்.

டிஐஜி விஜயகுமார் உடல் கோவையில் இருந்து இன்று மாலை தேனி ரத்தினம்நகரில் உள்ள அவரது பெற்றோர் வசிக்கும் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு, தேனி நகராட்சி மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல் சரகத்தில் தேனி மாவட்டம் உள்ளதால், இப்பகுதிக்கு பணியிட மாற்றம் பெற்று வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார் என்று இவருடன் பணிபுரிந்த காவல் துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்