மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழகம் சம்மதிக்காது - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழகம் சம்மதிக்காது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒவ்வொரு நாளும் தமிழகத்துக்கு கர்நாடகம் தரவேண்டிய தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே போகிறது. ஒரு நாளைக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் வரவேண்டும். ஆனால் தற்போது, மூன்றாம் தேதி வரையிலும் 12.213 டிஎம்சி தண்ணீர் நமக்கு கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் 2.993 டிஎம்சி தண்ணீர்தான் கொடுத்துள்ளனர். நமக்கு 9.220 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் விவசாயம்கூட பாதிக்கும். டெல்டா மாவட்ட பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்றால் உடனடியாக தண்ணீரை திறந்துவிட வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடக அரசிடம் பேச வேண்டும் என மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சரிடம் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவரும் உடனடியாக அதிகாரிகளை அழைத்து பேசி என்ன நிலைமை என்று என்னிடம் உறுதியளித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கர்நாடகம் தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை தராமல் இருப்பது சட்டப்படி குற்றம் என மத்திய அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன். பேச்சுவார்த்தை நடத்தினாலும், எழுத்து மூலமாக தெரிவித்தாலும் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு தமிழகம் ஒருபோதும் சம்மதிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE