தேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தேனி மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரது தரப்பு வழக்கறிஞர்கள் கூறியதால், இந்த உத்தரவு 30 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனைவிட 76,319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி அத்தொகுதி வாக்காளரான உப்பார்பட்டியை சேர்ந்த மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். ‘சொத்துகள், வங்கிக் கடன் போன்ற விவரங்களை வேட்புமனுவில் ரவீந்திரநாத் மறைத்துள்ளார். பணப் பட்டுவாடா செய்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்’ என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்குமாறு ரவீந்திரநாத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தள்ளுபடி செய்தார். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்ந்து நடந்தது.

விசாரணையின்போது, ரவீந்திரநாத் 3 நாட்கள் ஆஜரானார். தேர்தல் ஆணைய அதிகாரிகளும் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். வாதங்கள் முடிந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பான சில கூடுதல் விவரங்கள், ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு ரவீந்திரநாத் தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

அவற்றை சமர்ப்பிக்க தயாராக இருப்பதாகவும், ஆனால் இதுதொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை மீண்டும் கேட்க வேண்டும் என்றும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை கடந்த 28-ம்தேதி மீண்டும் விசாரித்தார்.

அப்போது ரவீந்திரநாத், கூண்டில் ஏறி சாட்சியம் அளித்தார். மிலானி தரப்பு வழக்கறிஞரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அருண், அவரிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆங்கிலம், தமிழில் குறுக்கு விசாரணை நடத்தினார். தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ரவீந்திரநாத் திட்டவட்டமாக மறுத்தார். இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் நேற்று தீர்ப்பளித்தார்.

147 பக்க தீர்ப்பின் விவரம்: விவசாயம் மூலமாக மட்டுமே வருமானம் கிடைத்ததாக கூறியுள்ள ஓ.பி.ரவீந்திரநாத் குமார், ரியல் எஸ்டேட், வட்டித் தொழில் மூலம் கிடைத்த வருமானத்தை வேட்புமனுவில் குறிப்பிடாமல் மறைத்துள்ளார். ‘வாணி ஃபேப்ரிக்ஸ்’ நிறுவனத்தில் இயக்குநராக இருந்தபோது வாங்கிய சம்பளம், அந்த நிறுவனத்தில் தனக்கு 16 ஆயிரம் பங்குகள் இருந்ததையும் வேட்புமனுவில் குறிப்பிடவில்லை.

ரூ.4.16 கோடிக்கு அசையும் சொத்துகள் உள்ள நிலையில், ரூ.1.35 கோடிக்கு மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி தேர்தல் அதிகாரி முறையாக விசாரணை நடத்தவில்லை.

அதேநேரம், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது மற்றும் முறைகேடுகள் தொடர்பாக சமூகவலைதளங்களில் பரவிய வீடியோ காட்சிகள் மட்டுமே சான்று ஆவணமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. ஆனால், பணப்பட்டுவாடா தொடர்பான குற்ற வழக்கு விசாரணை, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தனது சொத்து, கடன், பல்வேறு பொறுப்பு, வருமானம் ஆகியவற்றை ஓ.பி.ரவீந்திரநாத் வெளிப்படையாக வேட்புமனுவில் தெரிவிக்காமல் மறைத்துள்ளது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது முறையற்றது என்பதால், ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றதும் செல்லாது.

தேர்தல் ஆணையத்துக்கு..: அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்குமாறு தேர்தல்ஆணையத்துக்கு உத்தரவிடுகிறேன். இவ்வாறு நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

இதைத் தொடர்ந்து, ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம், வழக்கறிஞர் பி.ராஜலட்சுமி ஆகியோர், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால், அதுவரை இத்தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரினர். இதை ஏற்றுக்கொண்டநீதிபதி, இந்த தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

2019 மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி சார்பில் தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத். மற்ற அனைத்து தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE