பாஜகவை எதிர்ப்பவர்களை பழிவாங்கவே பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படுகிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: பாஜகவின் கொள்கைகள், ஆட்சியை எதிர்ப்பவர்களை பழிவாங்கவே பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படுகிறது என்று தமது உறவினர் இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று தமது மைத்துனரும், இஎஸ்ஐ மருத்துவமனை இயக்குநருமான மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தியின் மகன் சாரங்கராஜன் என்கிற சஞ்சய் - ச.கீர்த்தனா ஆகியோரின் திருமணத்தை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிற காரணத்தால், பெரும்பாலும் குடும்பத்தாரோடு அதிக நேரம் எங்களைப் போன்றவர்கள் செலவு செய்ய முடியாது என்கிற ஒரு ஆதங்கம் எல்லோர் குடும்பத்திலும், குறிப்பாக என்னுடைய குடும்பத்துக்கும் நிச்சயம் இருக்கும். ஆனால் இந்தத் திருமணத்தின் மூலமாக ஓரளவுக்கு அந்த ஆதங்கம் குறைந்திருக்கும் என நான் கருதுகிறேன்.

இன்றைக்கு வள்ளலாரைப் பற்றி ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார். பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல மாட்டேன். புலம்பிக் கொண்டிருக்கிறார்; உளறிக் கொண்டிருக்கிறார். அவர் யார் என்பதை பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை. அது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் அவருக்கெல்லாம் நேர்மாறாக, வள்ளலார் மீது ஆழ்ந்த பற்றும் புரிதலையும் கொண்டு பேசக் கூடியவர். அவரைப் பற்றி கட்டுரையாக எழுதக் கூடியவர். அந்த அளவுக்கு ஆற்றலைக் கொண்டவராக விளங்கிக் கொண்டிருப்பவர்தான் மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி.

இன்றைக்கு நாடு போய்க்கொண்டிருக்கும் நிலைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். இந்திய நாட்டுக்கு ஒரு ஆட்சி மாற்றம் தேவை. காரணம், இன்றைக்கு மத்தியில் இருக்கும் பாஜக, ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து இன்றுவரை தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற முன்வரவில்லை. அதற்கு நேர்மாறாக மக்கள் விரோத ஆட்சியை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில்கூட ஒரு சட்டத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளனர். அது ‘பொது சிவில் சட்டம்’. நாட்டில் ஏற்கெனவே சிவில் சட்டம், கிரிமினல் சட்டம் என்ற சட்டங்கள் உள்ளன. அதை நீக்கிவிட்டு பொது சிவில் சட்டமாக கொண்டுவந்து, பாஜகவின் கொள்கைகளை, அந்த ஆட்சியை எதிர்க்கக் கூடியவர்களை எல்லாம் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில், மக்களுக்குத் துன்பங்களை, கொடுமைகளைக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்று இன்றைக்கு அவர்கள் செய்து கொண்டிருக்கும் காரியங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஏற்கெனவே அரசியல்வாதிகளை, அவர்களை எதிர்க்கக் கூடியவர்களை எல்லாம் இன்றைக்கு சிபிஐ, ஐடி, ஈடி என்ற துறைகளை எல்லாம் வைத்து மிரட்டி கொண்டிருக்கும் ஒரு ஆட்சி, மத்திய ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE