அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் | அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அனைத்து ஆவணங்களையும் மறைக்காமல் தாக்கல் செய்ய வேண்டுமென அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருவதால் விடுமுறை தினமான நாளை (ஜூலை 8) இந்தவழக்கை பிரத்யேகமாக விசாரிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக்கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச்சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர்.

செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகக்கூறி அவருடைய மனைவி எஸ்.மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த இருநீதிபதிகள் அடங்கிய அமர்வில் நீதிபதி ஜெ.நிஷாபானு, அமைச்சர்செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் என்றும், நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி, செந்தில் பாலாஜியை கைது செய்ததில் எந்த சட்ட விதிமீறலும் இல்லைஎன்றும் மாறுபட்ட தீர்ப்பளித்தனர். அதையடுத்து இந்த வழக்கைவிசாரிக்கும் 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப் பட்டார்.

அதன்படி இந்த வழக்கு, நீதிபதிசி.வி.கார்த்திகேயன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இந்த வழக்கில் தங்களது தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் ஆஜராகவுள்ளதால் வழக்கு விசாரணையை வரும்11-ம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்தவழக்கில் மீண்டும் நீண்ட வாதங்கள்நடத்தி இழுத்தடிக்க அனுமதிக்கக் கூடாது என்றார்.

அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கை உச்ச நீதிமன்றமும் கண்காணித்து வருகிறது. எனவே இந்தவழக்கை விடுமுறை தினமான வரும் ஜூலை 8-ம் தேதி (நாளை) முழுமையாக விசாரிக்கலாம் என நினைக்கிறேன். இருதரப்பினரும் அன்றைய தினம் ஆஜராகி தங்களது வாதங்களை முன்வைக்கலாம் என்றார்.

நீதிபதி சி.வி.கார்த்திகேயனின் இந்த முடிவை வரவேற்பதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் துஷார் மேத்தா தெரிவித்தார்.

கைதில் சந்தேகங்கள்: அதன்பிறகு நீதிபதி, ‘ஏற்கெனவே அதிமுக தொடர்பான வழக்கை 3-வது நீதிபதி சனிக்கிழமை முழுமையாக விசாரித்தார். அதேபோல இந்த வழக்கையும் விசாரிக்க தலைமை நீதிபதியிடம் அனுமதி கோரவுள்ளேன். எனவே இதுதொடர்பாக முடிவெடுக்க இந்தவழக்கு விசாரணையை நாளைக்கு (இன்று) தள்ளி வைக்கிறேன் எனக் கூறினார்.

மேலும், அமைச்சர் செந்தில்பாலாஜி கைது விவகாரம் அதிகாலை 1.39 மணிக்கு நடந்துள்ளது என்பதால் இதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே இந்த வழக்கின் புலன் விசாரணைதொடர்பான அனைத்து ஆவணங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மறைக்காமல் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE