திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகள் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்று அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக இளைஞரணி செயலாளராக 4 ஆண்டுகளை நிறைவுசெய்து, 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். இந்த மகிழ்வான தருணத்தில், கட்சியின் மாவட்ட, மாநகரங்களுக்கான இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இளைஞரணி நிர்வாகிகள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். வாய்ப்பு கிடைக்காதவர்கள், சோர்வடைய வேண்டாம். உங்களின் கட்சிப் பணிகள் உரிய நேரத்தில் அங்கீகரிக்கப்படும். அனைவரும் இணைந்து கட்சிப் பணிகளை மேற்கொள்வோம்.

இளைஞரணியை `இயக்கத்தின் புது இரத்தம்’ என்பார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இன்று புத்துணர்ச்சியோடு இயக்கப் பணியைத் தொடங்கியுள்ள நீங்கள், அது சற்றும் குறைந்திடாமல் பணிகளைத் தொடர வேண்டும். கட்சியின் வளர்ச்சியும், வெற்றியும் வெறும் கட்சிக்கானது மட்டுமல்ல.அது ஒட்டுமொத்த தமிழகத்துக்கான வெற்றி என்பதை உணர வேண்டும்.

எனவே, இவற்றை எல்லாம்நன்கு உணர்ந்து, இளைஞரணியின் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலுக்கு, இந்தியா முழுவதும் உள்ள தோழமை சக்திகளை ஒருங்கிணைக்கும் பணிகளை நம் முதல்வர் மேற்கொண்டு வருகிறார். அவரது கரங்களை வலுப்படுத்தும் பெரும் பொறுப்பு நம்மிடம் உள்ளது.

கட்சியின் சாதனைகளை ஒவ்வொருவரின் மனதிலும் நிலைநிறுத்தும் வகையில், நம் செயல்பாடுகள் அமைய வேண்டும். சிலதினங்களில் புதுச்சேரி, கேரளா,ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கான இளைஞரணி நிர்வாகிகள் பட்டியலும் வெளியாக உள்ளது.அதன் பிறகு, இளைஞரணியின் மாவட்ட, மாநகர,மாநில அமைப்பாளர், துணைஅமைப்பாளர்கள் கூட்டத்தை நடத்த உள்ளோம். இவ்வாறு உதயநிதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE