பொது சிவில் சட்டம் | பிரதமரின் பேச்சு சட்ட ஆணையத்துக்கு அழுத்தம் கொடுப்பதாக உள்ளது - ஜவாஹிருல்லா கண்டனம்

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: பொது சிவில் சட்டம் தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சு சட்ட ஆணையத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இருப்பதாக தருமபுரியில் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று (ஜூலை 6) மாலை தருமபுரி வந்தார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கலின்போது அளித்த தகவல்கள் பொய்யானவை என்பதால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்த தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில், ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதிமுகவினர் உண்மைகளை எவ்வாறு மறைப்பார்கள் என்பதற்கு இது சான்று.

கிடப்பில் உள்ள வழக்குகள், மசோதாக்கள் குறித்து தமிழக சட்டத் துறை அமைச்சர் ஆளுநருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், சில வழக்குகள் தொடர்பாக சில கூடுதல் விவரங்கள் தேவை என கேட்டிருப்பது வியப்பளிக்கிறது. தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சிக்கு எதிராக ஆளுநர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

மத்திய அரசு, சட்ட ஆணையம் மூலம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மக்களின் கருத்துகளை கேட்டுள்ளது. போபாலில் அண்மையில் நடந்த பாஜக கூட்டத்தில் பிரதமர் மோடி இந்தியாவுக்கு 2 சட்டங்கள் இருக்க முடியாது. ஒரே சட்டம் தேவை என பேசியிருக்கிறார். அவர் வகிக்கும் பதவிக்கு இந்த கருத்து கண்ணியத்தை அளிப்பதாக இருக்காது. சட்ட ஆணையத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பிரதமர் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

5 ஆண்டுகளுக்கு முன்பு சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்டபோது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கை, ‘பன்முகத் தன்மை கொண்ட நம் இந்திய நாட்டுக்கு பொது சிவில் சட்டம் தேவையில்லை’ என்று தெரிவித்துள்ளது.

ஆனாலும், வரவிருக்கும் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு பொது சிவில் சட்ட செயல்பாடுகளை மோடி அரசு தற்போது மேற்கொள்கிறது. இது ஒரு தேர்தல் வித்தையாகவே தெரிகிறது. பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கூறும்போது, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பொது சிவில் சட்டம் இல்லாமல் இந்தியா சிறப்பாக வாழ்ந்து வந்திருக்கிறது. இந்த சட்டம் கொண்டு வருவது என்பது ஆர்எஸ்எஸ் திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தான் என தெரிவித்துள்ளார்.

பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜெயின், சுய மரியாதை திருமணம் செய்பவர்கள் போன்றோருக்கும் எதிரானது தான். நம் நாட்டில் 98 சதவீதம் சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானவையாக தான் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன.

மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி குளிர்காயும் எண்ணத்துடன் பாஜக இந்த சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கிறது. இது நாட்டுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய முயற்சி. அதிமுக உட்பட அனைத்து அரசியல் கட்சியினரும் இந்த சட்டத்தை எதிர்த்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்ற அதிமுக துணை போகாமல் உறுதியாக இருக்க வேண்டும். வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீட்டுக்கு அனுப்புவோம்.

அமைச்சரை பதவியை விட்டு ஆளுநர் நீக்கியதாக இதுவரை வரலாறு இல்லை. அதைச் செய்த பெருமை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியையே சேரும். தமிழ்நாட்டின் சர்வாதிகாரியாக அவர் செயல்படுகிறார். தமிழக ஆளுநர் திரும்பப் பெறப்பட வேண்டும் என்பதே மாநில உரிமைகளை நேசிக்கக் கூடிய அனைவரின் விருப்பமாக உள்ளது. அவர் தமிழகத்தில் இருந்து விரட்டப்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்