கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமனம் - ஆய்வுப் பணிகளை உடனே தொடங்கினார் 

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கோவை மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தடையின்றி மேற்கொள்ள ஏதுவாக, மாவட்ட பொறுப்பு அமைச்சராக சு.முத்துசாமி நியமிக்கப்பட்டார். அவர் இன்று கோவையில் ஆய்வுப் பணிகளை தொடங்கினார்.

தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றான கோவையில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை பிடித்தது. இருப்பினும், கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். 9 இடங்களில் அதிமுக வேட்பாளர்களும், ஒரு இடத்தில் பாஜக வேட்பாளரும் வெற்றி பெற்றனர். திமுகவினர் வெற்றி பெற்ற ஒவ்வொரு மாவட்டங்களிலும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஆனால், ஆளுங்கட்சிப் பிரதிநிதிகள் யாரும் இல்லாததால் கோவையில் அமைச்சர்கள் யாரும் நியமிக்கப்பட முடியவில்லை. திமுக ஆட்சியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லவும், மாவட்டத்தின் அரசின் வளர்ச்சித் திட்டப்பணிகள் முறையாக நடக்கிறதா என்பதை கண்காணிக்கவும், வளர்ச்சித் திட்டப்பணிகளை தீவிரப்படுத்தவும் திமுக ஆட்சிக்கு வந்த சமயத்தில், கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர்களாக கா.ராமச்சந்திரன், அர.சக்கரபாணி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

அவர்களும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடக்கும் வளர்ச்தித் திட்டக் கூட்டங்களில் கலந்து கொண்டு வந்தனர். அதன் பின்னர், 2021-ம் ஆண்டு இறுதியில் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சர்கள் மாற்றப்பட்டனர். அதன்படி, கோவைக்கான பொறுப்பு அமைச்சராக கரூரைச் சேர்ந்தவரும், மின்துறை, மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டார். அவர், கோவையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும் கூட்டங்களில் பங்கேற்று வளர்ச்சித் திட்டப்பணிகளை தீவிரப்படுத்தினார்.

முதல்வரை மு.க.ஸ்டாலின் பங்கேற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளையும் நடத்திக் காட்டினார். அதுதவிர, அரசுப் பணிகள் மட்டுமல்லாது, கோவையில் திமுக கட்சியை பலப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவை அதிக இடங்களில் வெற்றிபெற வைத்தார்.

இந்நிலையில், அமலாக்கத் துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, உடல்நிலை பாதிப்பால் மருத்துவ சிகிச்சையில் இருந்து வருவதால், கோவையில் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொய்வின்றி நடக்க ஏதுவாக பொறுப்பு அமைச்சர் இன்று மாற்றம் செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதில், ஈரோட்டைச் சேர்ந்தவரும், வீட்டுவசதித்துறை அமைச்சருமான சு.முத்துசாமி கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இவர், கோவையில் இன்று (ஜூன் 6) முதல் தனது பணிகளைத் தொடங்கினார். வால்பாறையில் மழை பாதிப்பு உள்ளிட்ட பணிகளை அவர் ஆய்வு செய்தார். மாவட்ட நிர்வாகத்தினர் கூறும்போது, ‘‘பொறுப்பு அமைச்சர் சு.முத்துசாமி கோவையில் இன்று ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து ஓரிரு நாட்களில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தையும் அவர் தலைமையில் நடத்தப்பட உள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE