சேலம் | இடிந்து விழும் நிலையில் அரசு நூலகம் - புதிய கட்டிடம் கட்ட வாசகர்கள் கோரிக்கை

By த.சக்திவேல்

சேலம்: மேச்சேரி அருகே மல்லிகுந்தம் அரசு ஊர்ப்புற நூலக கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் வாசகர்கள் அச்சமடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகேயுள்ள மல்லிகுந்தம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் அரசு ஊர்ப்புற நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் வாசகர்களாக உள்ளனர்.

நூலகத்தில் கவிதை, கட்டுரை, சிறுகதைகள், மருத்துவம், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் என 15 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. மேலும், வார, மாத இதழ்கள் மற்றும் நாளிதழ்களும் வருகின்றன. இங்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர்.

இந்நிலையில் நூலகக் கட்டிடம் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. கட்டிடத்தின் சிமென்ட் பூச்சு ஆங்காங்கே பெயர்ந்து விழுந்துள்ளது. மேலும் கட்டிட சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாசகர்கள் ஒருவித அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். எனவே, ஆபத்தான நிலையில் உள்ள நூலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என வாசர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, நூலக வாசகர் ராஜாகண்ணு கூறியதாவது: "இந்த நூலகத்தில் இலக்கியம், அறிவியல், மருத்துவம், கட்டுரை, நாளிதழ் ஆகியவற்றை படிக்க போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் என பலரும் வந்து செல்கின்றனர். இந்த நூலகம் கட்டப்பட்டு 25 ஆண்டுகளான நிலையில் பராமரிப்பு பணிகள் இதுவரை நடைபெறவில்லை. இதனால் நூலகம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மழைக்காலங்களில் கட்டிடத்துக்குள் தண்ணீர் கசிவு ஏற்படுவதால் புத்தங்கள் நனைந்து வீணாவதும் நடக்கிறது. வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் அரசு, நூலகத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE