“திமுகவின் இரண்டு ஆண்டு கால இருண்ட ஆட்சி” - இபிஎஸ் சரமாரி தாக்கு

By செய்திப்பிரிவு

திருச்சி: “இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சி, இருண்ட கால ஆட்சி. இந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில், தமிழக மக்களுக்கு என்ன செய்தீரகள்?” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

திருச்சி திருவெறும்பூரில் உள்ள பெல் (BHEL) நிறுவன வளாகத்தில் எம்ஜிஆரின் முழு உருவ வெண்கலச் சிலையை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை திறந்து வைத்தார். பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியது: "முதல்வர் ஸ்டாலின் எத்தனை "பி" டீம்களை உருவாக்கினாலும் அதிமுகவை அழிக்க முடியாது. அதிமுக தொண்டன் உழைக்கப் பிறந்தவன். மற்றவர்களை வாழவைக்கப் பிறந்தவன். அப்படிப்பட்ட தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக. உங்கள் தலைவரைப் போல, வீட்டில் இருப்பவர்கள், குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதற்காக எம்ஜிஆர் அதிமுகவைத் தோற்றுவிக்கவில்லை.

தமிழகத்தில் 31 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுக. 31 ஆண்டு கால ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்து எம்ஜிஆரும், ஜெயலலிதாவும், இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கிச் சென்றுள்ளனர். ஆனால், இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின், இந்தியாவின் முதன்மை முதல்வர் தான் என்று சொல்லிக் கொள்கிறார். எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்றாக இணைத்து, மத்தியில் ஒரு ஆட்சியை ஏற்படுத்தப்போவதாக கூறுகிறார். ஸ்டாலினால் தமிழகத்தையே காப்பாற்ற முடியவில்லை. நீங்கள் எங்கே மத்தியில் காப்பாற்றப் போகிறீர்கள்?

இன்றைக்கு திமுகவைச் சேர்ந்த அமைச்சர்களும், கட்சியின் முன்னோடி நிர்வாகிகளுக்கெல்லாம் ஜுரம் வந்துவிட்டது. எங்கே வருமான வரித்துறை வரும்? எங்கே அமலாக்கத் துறை வந்துவிடுமோ என்று அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பல அமைச்சர்களின் தூக்கமே போய்விட்டது. அதிமுகவையும், அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகளைப் பார்த்து பாஜகவுக்கு அடிமையென்றும், வருமான வரித்துறையைப் பார்த்து பயப்படுவதாகவும், அமலாக்கத் துறையைப் பார்த்து பயப்படுவதாகவும் கூறினீர்களே, ஆனால், இப்போது யாருக்கு ஜுரம் வந்தது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். அதிமுகவினரைப் பொறுத்தவரை, மடியிலே கனமில்லை, வழியிலே பயமில்லை.

செந்தில் பாலாஜியை கைது செய்தவுடன் அமைச்சரவையே மருத்துவமனைக்குச் சென்று அவருக்கு ஆறுதல் சொல்லும் காட்சியை அனைத்து தொலைக்காட்சியிலும் பார்த்தோம். பதறுகின்றனர், அவர்களுடைய முகத்தில் பயம் காணப்பட்டது. செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையிடம் ஏதாவது வாக்குமூலம் கொடுத்துவிட்டால் என்ன ஆகும் என்ற அச்சத்தில், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தார் அனைவரும் செந்தில் பாலாஜியை சந்தித்துப் பேசுகின்றனர். அப்படியென்றால் எவ்வளவு பயம் இருக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் அவர்களே, செந்தில் பாலாஜி மட்டும் வாய் திறந்தால் நீங்கள் இருப்பது கோட்டை அல்ல.

இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சி இருண்ட கால ஆட்சி. இந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில், தமிழக மக்களுக்கு என்ன செய்தீரகள்? இரண்டு ஆண்டுகளில் திமுக அமைச்சர்கள் கொள்ளை அடித்ததுதான் மிச்சம். முதல்வர் ஸ்டாலினின் குடும்பம் கொள்ளை அடித்ததுதான் மிச்சம். அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒரு ஆடியோ மூலம் கருத்தை தெரிவிக்கிறார். சபரீசனும், உதயநிதி ஸ்டாலினும், 30 ஆயிரம் கோடியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார் என்ற செய்தியை சொல்கிறார். சமூக வலைதளத்தில் இந்த ஆடியோ பரவியது. இன்று வரை முதல்வர் ஸ்டாலின் அதற்கு பதில் சொல்லவில்லை" என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE