செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரும் வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு 

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், எந்தெந்த அம்சங்களில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்தனர் என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத் துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, பாரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட நிலைபாட்டை எடுத்தனர். நீதிபதி நிஷா பானு, அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம். எனவே, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். ஆனால் நீதிபதி பரதட்சக்கரவர்த்தி, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை. அவர் 10 நாட்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். அதற்கு மேலும் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் எனக் கூறி ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு வியாழக்கிழமை பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். மேலும், இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள் இருவரும் எந்தெந்த விசயத்தில் மாறுப்பட்ட தீர்ப்பை பிறப்பித்துள்ளனர் என்பதை தொகுத்து வைத்துள்ளதாகவும், அதை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை நாளை (ஜூலை 7) விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில், மாறுபட்ட தீர்ப்பளித்த நீதிபதிகள் எந்தெந்த அம்சங்களில் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளனர் என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE