சென்னை: பாஜகவை எதிர்க்கக் கூடியவர்களை எல்லாம் சிபிஐ, அமலாக்கத் துறைகளை வைத்து மிரட்டி கொண்டிருக்கும் ஒரு ஆட்சி இன்றைக்கு மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், "வழக்கமாகத் தொடர்ந்து பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுகிற காரணத்தால், பெரும்பாலும் குடும்பத்தாரோடு அதிக நேரம் எங்களைப் போன்றவர்கள் செலவு செய்ய முடியாது என்கிற ஒரு ஆதங்கம் எல்லோர் குடும்பத்திலும், குறிப்பாக கழகக் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் உண்டு. என்னுடைய குடும்பத்திற்கும் நிச்சயம் இருக்கும். ஆனால் இந்தத் திருமணத்தின் மூலமாக ஓரளவிற்கு அந்த ஆதங்கம் குறைந்திருக்கும் என நான் கருதுகிறேன்.
இருந்தாலும் எல்லோரும் சொல்வதுபோல இது ஒரு கழகக் குடும்பம். திராவிட முன்னேற்றக் கழகத்தை அறிஞர் அண்ணா தொடங்கிய நேரத்தில், ‘தம்பி’ என்று எல்லோரையும் விளித்து ஒரு குடும்பப் பாச உணர்வோடு, அதைத்தொடர்ந்து தலைவர் கருணாநிதி அனைவரையும் ‘உடன்பிறப்பே’ என்று விளித்து ஒரு குடும்பப் பாச உணர்வோடு நம்மையெல்லாம் உருவாக்கி இருக்கிறார்கள். எனவே என்னைப் பொறுத்தவரையில் இதுவும் ஒரு கழகக் குடும்பம் என்று அந்த நிலையில்தான் இந்த மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று, மணவிழாவிற்குத் தலைமையேற்று, மணவிழாவை நடத்தி வைத்து உங்கள் அனைவரின் சார்பில் மணமக்களை நானும் வாழ்த்துவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.
மணக்கோலம் கொண்டிருக்கும் மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று, சிறப்போடு வாழ்ந்திட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இன்றைக்கு நாடு போய்க்கொண்டிருக்கும் நிலைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒரு நல்லாட்சி உருவாக்கித் தருவதற்கு நீங்கள் எந்த அளவிற்குத் துணை நின்றீர்களோ, அந்த ஆட்சி – ‘திராவிட மாடல்’ ஆட்சியாக இன்றைக்கு எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ. தேர்தல் நேரத்தில் வழங்கிய உறுதிமொழிகளை - வாக்குறுதிகளை எல்லாம் எந்த அளவிற்குத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறதோ, அதுபோல் இந்திய நாட்டிற்கு ஒரு ஆட்சி தேவை.
» நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை
» பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தாமதமாவதற்கு ஆளுநரே காரணம்: உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி
காரணம், இன்றைக்கு ஒன்றியத்தில் இருக்கும் ஆட்சி – பாஜக ஆட்சி. அந்த பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து இன்று வரையில் தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களையும் நிறைவேற்ற முன்வரவில்லை; அதற்கு நேர்மாறாக மக்கள் விரோதப் போக்கோடு மதத்தை, சனாதனத்தை இன்றைக்கு மக்களிடத்தில் திணித்து, ஒரு சர்வாதிகார ஆட்சியை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அண்மையில்கூட ஒரு சட்டத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்; ‘பொது சிவில் சட்டம்’. நாட்டில் ஏற்கனவே சிவில் சட்டம், கிரிமினல் சட்டம் என்ற சட்டங்கள் இருக்கிறது. அதை நீக்கிவிட்டு பொது சிவில் சட்டமாக கொண்டு, வந்து பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளை, அந்த ஆட்சியை எதிர்க்கக் கூடியவர்களை எல்லாம் பழிவாங்க வேண்டும் என்கிற நோக்கத்தில், மக்களுக்குத் துன்பங்களை, கொடுமைகளைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற அந்தத் தீய சக்தியோடு இன்றைக்கு அவர்கள் செய்து கொண்டிருக்கும் இந்தக் காரியங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே அரசியல்வாதிகளை, அவர்களை எதிர்க்கக் கூடியவர்களை எல்லாம் C.B.I., I.T., E.D., என்ற அந்தத் துறைகளை எல்லாம் வைத்து மிரட்டி கொண்டிருக்கும் ஒரு ஆட்சி இன்றைக்கு மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது.
இங்கேகூட இந்தத் திருமணத்தைப் பற்றிப் பேசுகிறபோது, இது குடும்பக் கட்சியாக, எங்கள் குடும்பத்தில் நடைபெறும் திருமணமாக நடக்கிறது என்றெல்லாம் பெருமையோடு சொன்னார்கள். இதை கேட்டால், இன்றைக்கு மத்தியில் இருக்கும் பிரதமருக்கு கோபம்கூட வந்துவிடும். ஏனென்றால் மத்திய பிரதேசத்தில் சென்று, நம்முடைய பிரதமர் என்ன பேசியிருக்கிறார் என்றால்; மத்திய பிரதேசம் சென்றுகூட அவருக்கு திமுகவின் நினைவுதான் வந்திருக்கிறது. அங்கே போய் என்ன பேசியிருக்கிறார் என்றால், குடும்பத்தின் வளர்ச்சிக்காக ஆட்சியில் இருக்கிறார்கள், கட்சி நடத்துகிறார்கள் என்று விமர்சனம் செய்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் அடுத்த நாளே, இதே மண்டபத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறபோது, நான் குறிப்பிட்டுச் சொன்னேன். இது குடும்பக் கட்சிதான். அண்ணாவால் உருவாக்கப்பட்ட - கருணாநிதியால் வளர்க்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழகம் என்பது குடும்பக் கட்சிதான். இன்னும் சொல்ல போனால், தமிழகமே திமுகவின் கட்சிதான். தமிழகமே கருணாநிதி குடும்பம்தான் என்று அன்றைக்கே நான் அழுத்தம் திருத்தமாக சொன்னேன்.
எனவே அப்படிப்பட்ட குடும்பத்தில் இன்றைக்கு நடைபெறும் இந்தத் திருமண நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து நானும் மணமக்களை வாழ்த்துகிறேன். வாழ்த்துகிற நேரத்தில் மணமக்களை நான் அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புவது, உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், அந்தக் குழந்தைகளை அளவோடு பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் யாருக்கும் ஐயப்பாடு இருக்கப்போவதில்லை. ஆனால் பிறக்கும் அந்தக் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்ற அந்த வேண்டுகோள் மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்து வைத்து வாழ்க மணமக்கள்… வாழ்க மணமக்கள்… புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும் “வீட்டிற்கு விளக்காய்… நாட்டிற்குத் தொண்டர்களாய்” இருந்து வாழுங்கள்… வாழுங்கள் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன். " இவ்வாறு முதல்வர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago