அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் உரிய நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் - சுகாதாரத் துறை செயலர் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 13,211 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் பெரும்பாலும் குறித்த நேரத்துக்கு பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இதுதொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் செயலர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் அரசு மருத்துவமனைகளில் அவ்வப்போது ஆய்வு செய்யும்போது, பணியில் மருத்துவர்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டை நோயாளிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அரசுமருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் வரை மருத்துவர்கள் குறித்த நேரத்துக்கு பணிக்கு வருவதை உறுதி செய்யும்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசு மருத்துவக் கல்லுாரிமருத்துவமனைகளில், பல்துறை மருத்துவர்கள், புறநோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7.30 முதல் நண்பகல் 12 மணி வரை கட்டாயம் பணியாற்ற வேண்டும். 24 மணி நேரமும் உள்நோயாளிகள் பிரிவை கண்காணிக்க வேண்டும்.

மற்ற மருத்துவர்கள் காலை 9 முதல் மாலை 4 மணி வரை பணியில் இருக்க வேண்டும். நிலைய மருத்துவ அலுவலர் காலை 7 மணி முதல் மருத்துவமனையின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும். மருத்துவமனை கண்காணிப்பாளர் காலை8 மணி முதல் பணியை தொடங்குவதுடன் அவசர சிகிச்சைப் பிரிவை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.

மாவட்ட தலைமை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில், புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு காலை 7.30 முதல் நண்பகல் 12 மணிவரை செயல்பட வேண்டும். 24 மணி நேரம் பணியில் உள்ள மருத்துவர்கள் பிற்பகல் 3 முதல் மாலை 5 மணி வரை புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்க வேண்டும். தலைமை மருத்துவ அலுவலர்கள் காலை 7.30 முதல் பகல் 1.30 மணி வரையிலும், பிற்பகல் 3 முதல் மாலை 5 மணி வரையிலும் பணியில் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE