பொது சிவில் சட்டத்தை அதிமுக ஆதரிக்காது - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பழனிசாமி

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தை அதிமுக ஆதரிக்காது. இதை கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலேயே திட்டவட்டமாக தெரிவித்துள்ளோம். அதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்று கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமியிடம், ‘‘மத்திய அரசு கொண்டுவரும் பொது சிவில் சட்ட விவகாரத்தில், அதிமுகவின் நிலைப்பாடு என்ன?’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தபழனிசாமி, ‘‘கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது அதிமுகவெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பொது சிவில் சட்டம் தொடர்பான வாக்குறுதி இடம்பெற்றுள்ளது. அதுதான், அதிமுகவின் நிலைப்பாடு’’ என்று தெரிவித்தார்.

அதிமுகவின் 2019 தேர்தல் அறிக்கையில், ‘பல்வேறு மதங்களையும், வெவ்வேறான நம்பிக்கைகளையும் கொண்ட மக்களை ஒருங்கிணைக்கும் ஒரே இணைப்பு சக்தியாக மதச்சார்பின்மை விளங்குகிறது. ஒவ்வொரு நபரும் அவரவர்விருப்பத்துக்குரிய மதத்தை பின்பற்றுவதற்கும், அமைதி, நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் உரிமை அளிக்கும் அரசமைப்பு சட்டத்தின் 25, 26-வது பிரிவுகளுக்கு அதிமுக உரிய மதிப்பளிக்கிறது. சிறுபான்மையினரின் மதம் மற்றும் மனித உரிமைகளைப் பறிக்கும் வகையில், ஒரே சீரான உரிமையியல் விதி தொகுப்புக்காக, அரசமைப்பு சட்டத்தில் எவ்வித திருத்தங்களையும் கொண்டுவர வேண்டாம் என்று மத்திய அரசை அதிமுகவலியுறுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், பொது சிவில் சட்டத்துக்கு அதிமுகவின் ஆதரவு இல்லை என்பதை பழனிசாமி சூசகமாக தெரிவித்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ‘மாமன்னன்' திரைப்படம் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் இடையே எழுச்சியை ஏற்படுத்தியதுபோல தவறான தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தனபாலின் சட்டையை கிழித்து, இருக்கையை உடைத்து, கீழே தள்ளியவர்கள் திமுகவினர். சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட ஒரே கட்சி அதிமுக. தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து பேச இவர்களுக்கு தகுதி இல்லை.

நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்களை ஒருங்கிணைக்கப் போவதாக கூறும் முதல்வர், ஏன் தோழமைக் கட்சியான கர்நாடக காங்கிரஸிடம் பேசவில்லை.

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டமிட்டு தவறான செய்திகளை பரப்பி வருகிறார். இரு மாநிலங்களும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொண்ட பிறகுதான், காவிரி மேலாண்மை ஆணையமும், ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்பட்டன.

முதல்வர் மவுனம் ஏன்? : முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் மவுனம் சாதிக்கிறார். ஜூன் மாதத்துக்கு உரிய நீரை பெறாமல், தமிழகத்துக்கு துரோகம் இழைக்கிறார். மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்தது முதல்வர்தான். கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாதது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். முதல்வர் சரியான முறையில் நடவடிக்கை எடுத்தால்தான், குறுவை சாகுபடி செய்ய முடியும்.

அதிமுக ஆட்சியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய அளவில் தமிழகம் முதல் இடத்தில் இருந்தது. இன்று 4-வது இடத்துக்கு சென்றுவிட்டது. கரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்று பிரதமர் மோடி பாராட்டினார். ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் தமிழகம் சீரழிந்துவிட்டது. சென்னையில் உரிய முறையில் சிகிச்சை அளித்திருந்தால் குழந்தையின் கை அகற்றப்பட்டிருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

‘‘இருவிதமான சட்டங்களால் நாட்டு நிர்வாகத்தை நடத்த முடியாது. நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறுவதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம்’’ என்று பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.

இதற்கிடையே, முஸ்லிம் சட்ட வாரியம் மற்றும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கொள்கை அளவில் இதைஏற்பதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. ‘‘பொது சிவில் சட்டத்தை எதிர்க்கவில்லை. ஆனால், இதைபாஜக அரசு அமல்படுத்த நினைக்கும் விதம்தான் தவறு’’ என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத் தொடரில், பொது சிவில் சட்டத்தை கொண்டுவரும் முயற்சியில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்த சூழலில், பாஜக உடனான தேர்தல் கூட்டணியை உறுதிசெய்துள்ள அதிமுக, பொதுசிவில் சட்டத்துக்கு ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஆலோசனை கூட்டத்தில் பேசிய பழனிசாமி, ‘‘பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதாக ஏற்கெனவே கூறிவிட்டோம். பாஜகஉடனான உறவையும் தெளிவுபடுத்தி விட்டோம். எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி என்பதை தேர்தல் வரும்போது தெரிவிப்போம்’’ என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE