சென்னையில் இரவு நேர போக்குவரத்துக்காக மேம்பாலங்களைத் திறக்க காவல் துறை முடிவு

By செய்திப்பிரிவு

சென்னை: பல்வேறு அலுவலக நேரங்கள் காரணமாக இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருவதால், சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சென்னையில் இரவு நேரங்களிலும் மேம்பாலங்களைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கட்டப்பட்டு திறக்கப்பட்டட அண்ணா மேம்பாலம் கடந்த வாரம் பொன்விழாவை நிறைவு செய்துள்ளது. இது தென்னிந்தியாவின் முதல் மேம்பாலம் ஆகும். இந்த மேம்பாலம் யோசனையின் வெற்றியைத் தொடர்ந்து சென்னை பெருநகரின் போக்குவரத்து நிலைமையை மேம்படுத்த பல மேம்பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

சென்னை பெருநகரில் தற்போது 33 மேம்பாலங்கள் உள்ளன. குறிப்பாக காலை மற்றும் மாலையில் அதிக போக்குவரத்து ஏற்படும் நேரங்களில் சென்னை பெருநகரில் சிறந்த வாகன போக்குவரத்தை உறுதி செய்வதில் அவை பெரிதும் உதவுகின்றன.

இருப்பினும், கரோனா தொற்று காலங்களில் சாலையைப் பயன்படுத்துபவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த இரவு நேரங்களில் அவை போக்குவரத்துக்காக மூடப்பட்டன. அதன்பிறகு, மேம்பாலங்களில் விபத்துகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் இரவில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கும் வகையில் இந்த நடைமுறை தொடர அனுமதிக்கப்பட்டது.

பல்வேறு அலுவலக நேரங்கள் காரணமாக இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருவதால், சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இரவு நேரங்களிலும் மேம்பாலங்களைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் போக்குவரத்து நிலைமையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக தற்காலிக நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகிறது. மேம்பாலங்களில் அதிவேகமாக வாகனம் ஓட்டாமல் இருக்க போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE