பஞ்சாயத்து கூட்டங்களில் கலந்துகொள்ளாத உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு: ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பஞ்சாயத்து கூட்டங்களில் கலந்துகொள்ளாத உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்யக் கோரிய பஞ்சாயத்து தலைவரின் மனுவை 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், தொடுகாடு கிராம பஞ்சாயத்தில் 9 வார்டுகளுக்கு கடந்த 2020ல் தேர்தல் நடந்தது. பிறகு, பஞ்சாயத்து தலைவராக வெங்கடேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். விதிப்படி மாதம் ஒரு முறை பஞ்சாயத்து கூட்டம் கூட்டப்படும் போது, முனுசாமி, பிரியங்கா, கோமதி, ராணி, யுவராஜ், மாரியம்மாள் ஆகிய 6 உறுப்பினர்கள் கலந்து கொள்வதில்லை. எனவே, அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பஞ்சாயத்து தலைவர் வெங்கடேசன் கடந்த மே மாதம் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியிருந்தார்.

இந்த மனுவை பரிசீலிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக் கோரி பஞ்சாயத்து தலைவர் வெங்கடேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், "முறையாக நோட்டீஸ் அனுப்பியும் 9 முறை இவர்கள் 6 பேரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மூன்று கூட்டங்களில் பங்கேற்கவில்லை என்றால் உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் வழிவகை செய்துள்ளது. எனவே விதிப்படி இவர்களை தகுதிநீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பஞ்சாயத்து செயல்பாடுகள் சுமூகமாக இருக்க வேண்டுமென மனுதாரர் நினைப்பதால் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். மனுதாரர் அளித்த மனுவை சட்டத்துக்கு உட்பட்டு, 6 பேரும் விளக்கம் அளிக்க வாய்ப்பளித்து, மனுவை பரிசீலித்து, 4 வாரங்களில் மாவட்ட ஆட்சியர் இறுதி முடிவெடுக்க வேண்டும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE