தமிழகத்துக்கான காவரி நீரை கர்நாடகம் உடனே வழங்க வலியுறுத்துக: மத்திய அமைச்சரிடம் துரைமுருகன் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: காவிரியில் இருந்து தமிழகத்துக்கான தண்ணீரை உடனடியாக வழங்க கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை விடுத்தார்.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டி டெல்லியில் இன்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். மேலும், மேகேதாட்டு அணையினை கட்டக் கூடாது என்று வலியுறுத்தி கோரிக்கை மனுவினை அவர் வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "ஜூன் மற்றும் ஜுலை 3ம் தேதி வரை 12.213 டி.எம்.சி அடி தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை 2.993 டி.எம்.சி அடி தண்ணீர் தான் வரப்பெற்றுள்ளது. 9.220 டி.எம்.சி அடி தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், காவிரி டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் எல்லாம் உலர்ந்துபோய்விடும்.

ஆகையினால், உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி, கர்நாடக அரசு, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய உரிய பங்கீட்டு நீரினை உடனடியாக வழங்குவதை உறுதி செய்வது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பொறுப்பாகும். எனவே, மத்திய அரசின் நீர்வளத் துறை அமைச்சர், தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய உரிய பங்கீட்டு நீரினை கர்நாடக அரசு உடனடியாக விடுவிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர், மத்திய அரசின் இணைச் செயலாளரை அழைத்து இது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துடன் கலந்தாலோசித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE