பொது சிவில் சட்டம் என்பது இந்து சிவில் சட்டமல்ல: ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து

By க.சக்திவேல்

கோவை: பொது சிவில் சட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் இன்று (ஜூலை 5) செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "ஆளுநர்களின் செயல்பாடு என்பது மாநில அரசுகளின் அணுமுறையையும் பொறுத்து அமைந்துள்ளது. ஆளுநர் என்பவர் ஏதோ அதிகாரம் செய்ய வந்ததாக கருதக் கூடாது. அவர் அரசியல் சட்டத்தின்படி ஒரு மாநில அரசு செயல்பட வேண்டும் என்பதை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறார்.

யார் தவறு செய்தாலும், தவறு தவறுதான். முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்தில் ஒருவேளை நான் இருந்திருந்தால், கண்டிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை, 'நீங்கள் சிறிது காலம் பதவியில் இருந்து விலகி இருங்கள். உங்கள் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்படவில்லையெனில் மீண்டும் இணைத்துக் கொள்கிறேன்' என்று சொல்லி இருப்பேன். அப்படி நடப்பதுதான் எதிர்காலத்தில் தார்மிக அரசியல் வளர உதவும். அந்த வகையில்தான் இதைப் பார்க்க வேண்டும். இதை தனி நபரின் மீது எடுக்கும் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கக் கூடாது.

பொது சிவில் சட்டம் என்பது இந்து சிவில் சட்டமல்ல. அனைவருக்கும் பொதுவான சட்டம். இதை அனைவரும் ஆதரிக்க வேண்டும். அதுதான் நமது சமுதாயத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தும். எதிர்க்கட்சிகளிடத்தில் ஒற்றுமை இருக்கிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எதிர்கட்சிகளிடயே ஒற்றுமை ஏற்படக்கூடாது என்பது எங்கள் வேலையல்ல. அவர்கள் ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். அதிகாரத்துக்காக ஒன்று சேருவது என்பது வேறு, நாட்டு மக்களின் நன்மைக்காக ஒன்று சேருவது என்பது வேறு" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE