மழைநீர் வடிகால், சாலை வசதிகளை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம்: சென்னை மேயர் பிரியா

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: மழைநீர் வடிகால், சாலை வசதிகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்தார்.

‘மக்களைத் தேடி மேயர்’ திட்டத்தின் கீழ் பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம், சென்னை மாநகராட்சியில் இரண்டு மண்டலங்களில் நடைபெற்ற நிலையில், இன்று (ஜூலை 5) மூன்றாவது கட்டமாக அடையாறு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தச் சிறப்பு முகாமில் மேயர் பிரியா மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சியில், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், ஆணையர் ராதாகிருஷ்ணன், துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, "மண்டலம் 5-ல் நடைபெற்ற மக்களைத் தேடி மேயர் முகாமில் 333 புகார்கள் பெறப்பட்ட நிலையில், 331 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளது. மண்டலம் 6-ல் நடைபெற்ற முகாமில் 241 புகார்கள் பெறப்பட்ட நிலையில், 160 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் மற்றும் சாலைகளை சீரமைப்பது தொடர்பாக அதிக புகார்கள் முகாமில் வருகிறது. சென்னை மாநாகராட்சி இந்த இரண்டு புகார்கள் மீது அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE