அரசு மருத்துவர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வருவதை உறுதிப்படுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் குறித்த நேரத்திற்கு வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி கடிதம் எழுதியுள்ளார். அரசு மருத்துவமனை முதல்வர்கள், இயக்குநர்கள், சுகாதார பணியாளர்கள் வெளிநோயாளிகளுக்கான நேரத்தை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவின் விவரம்:

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் : பல்வேறு துறை மருத்துவர்கள் மற்றும் புற நோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் ( Op incharge ) காலை 7.30 மணி முதல் 12 மணி வரை கட்டாயம் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை வழங்க வேண்டும். 24 மணி நேரமும் உள் நோயாளிகள் பிரிவை கண்காணிக்க வேண்டும்.

மற்ற மருத்தவர்கள் காலை 9 மணி முதல் 4 மணி வரை பணியில் இருக்க வேண்டும். நிலைய மருத்துவ அலுவலர் காலை 7 மணி முதல் மருத்துவமனையின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் காலை 8 மணி முதலும், அவரச சிகிச்சை பிரிவை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.

மாவட்ட தலைமை மற்றும் இதர அரசு மருத்துவமனைகள்: புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு காலை 7:30 மணி முதல் 12 மணி வரை செயல்பட வேண்டும். பல் மருத்துவம் மற்றும் பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளுக்கான புறநோயாளிகள் பிரிவு காலை 8 மணி முதல் 1 மணி வரையிலும் , மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் செயல்பட வேண்டும்.

24 மணி நேரம் பணியில் உள்ள மருத்துவர்கள் மாலை 3 மணி முதல் 5 மணி வரை புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்க வேண்டும். தலைமை மருத்துவ அலுவலர்கள் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 வரையிலும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரையிலும் பணியில் இருக்க வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள்: மூன்று மருத்துவ அலுவலர்கள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு காலை 9 முதல் மாலை 4 மணி வரையிலும் , 5 மருத்துவ அலுவலர்கள் கொண்ட ஆரம்ப சுகாதார மையத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் 2 மருத்துவ அதிகாரிகளும் , மாலை 2 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை ஒரு அதிகாரி என்று புறநோயாளிகள் பிரிவு இயங்கிட வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE